விழுப்புரம் மாவட்டத்தில் மிகப்பிரமாண்டமாக மாநாடு நடத்திக் காட்டிய நடிகர் விஜய், தற்போது விழுப்புரம் மாவட்டம் தண்ணீருக்குள் மூழ்கி தடுமாறும் நேரத்தில் வெளியே தலை காட்டாமல் முடங்கிக் கிடப்பது அரசியல் சர்ச்சையாக மாறியிருக்கிறது. அனைத்துக் கட்சித் தலைவர்களும் நிவாரணத்தில் ஈடுபட்டு நேரத்தில் விஜய் மட்டும் அமைதியாக இருக்கலாமா என்று அவரது கட்சியினரே சங்கடப்படுகிறார்கள்.

நான்கு மாவட்டங்களை உலுக்கியெடுத்த புயலுக்கு நடிகர் விஜய், ‘’திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்டச் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது. உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அங்கு மலையடிவாரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களையும், ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று அறிக்கை விட்டதுடன் நிறுத்திக் கொண்டார்.

அதேநேரம், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் அன்புமணி, தே.மு.தி.க. பிரேமலதா போன்ற அனைவரும் களத்தில் நிற்கிறார்கள். லண்டனில் இருந்து திரும்பிவந்த அண்ணாமலை நேற்றைய தினம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு இன்று ஆய்வுக்கு வந்துவிட்டார். இத்தனை தலைவர்களும் களத்தில் நிற்கும் நேரத்தில் விஜய் மட்டும் இன்னமும் அறைக்குள் இருக்கலாமா..? மக்கள் துயரப்படும்போது.. அவர்களுடன் நிற்காத இவர் ஒருஅரசியல் தலைவரா?

களத்துக்கு வாங்க விஜய்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link