Share via:
ராமதாஸிடம் இருந்து கட்சியை முழுமையாக கைப்பற்றிவிட முடியும் என்ற
நம்பிக்கையில் அன்புமணி அடித்து ஆடத் தொடங்கியிருக்கும் விவகாரம் பாமகவில் எக்கச்சக்க
அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
கட்சியின் பெயர், சின்னம் எல்லாம் எங்களுக்குத்தான். கட்சியின்
நிர்வாகிகள் 90 சதவீதம் பேர் எங்களுடன் தான் இருக்கிறார்கள் என்கிறது அன்புமணி தரப்பு.
இதன் அடுத்தகட்டமாக பாமக சட்டப்பேரவை குழு தலைவராக இருந்த ஜி.கே.மணியை அந்தப் பதவியிருந்து
நீக்கிவிட்டு, வெங்கடேஸ்வரனை நியமித்திருக்கிறது அன்புமணி தரப்பு.
ஜி.கே.மணி 1997 முதல் 2022 வரை பாமகவில் தலைவராக இருந்தவர், கட்சியின்
பல்வேறு ஏற்ற இறங்கங்களிலும் தளராது பயணித்தவர். இதனால் தான், அன்புமணியே கூட பல முறை,
அவரை ‘தியாகச் செம்மல்’ என்று அழைத்திருக்கிறார். அப்படிப்பட்ட தியாகச் செம்மலையே பொறுப்பிலிருந்து
நீக்கியிருக்கிறது அன்புமணி தரப்பு. அதோடு ராமதாஸ் ஆதரவாளரான எம்எல்ஏ அருளை, கட்சிலிருந்து
நீக்குவதாகவும் உறுதியாக சொல்லியுள்ளது அன்புமணி டீம்.
அருள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால், பாமகவில் உள்ள 5 எம்எல்ஏக்களில்
4 பேர் மட்டுமே இப்போது கட்சியில் உள்ளனர் என்றும், அதில் 3 பேர் தங்கள் பக்கம் உள்ளனர்
எனவும் தெரிவித்து, அவர்களை சட்டப்பேரவை குழு தலைவர், துணைத் தலைவர், கொறடா பதவிகளில்
நியமித்துள்ளது அன்புமணி தரப்பு. ஒருவேளை இதனை சபாநாயகர் அங்கீகரித்தால், சட்டப்பேரவையில்
அன்புமணி தரப்பே அதிகாரப்பூர்வ கட்சியாக கருதப்படும். ஆனால், இந்த விஷயத்தில் திமுக
ராமதாஸ்க்கே ஆதரவு தருவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, சட்டமன்றத்தில் பெரிய மாற்றம் நடப்பதற்கு
வாய்ப்பு இல்லை.
எனவே, அன்புமணி கணக்கை எல்லாம் ராமதாஸ் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
தேர்தல் ஆணையத்தில், ராமதாஸ் தான் கட்சியின் நிறுவனர், எனவே கட்சி தங்களுக்கே சொந்தம்
என்ற ரீதியில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், பாஜக இப்போது அன்புமணிக்கு ஆதரவாக இருப்பதால் ராமதாஸ்க்கு
சிக்கல் என்றே தெரிகிறது. தேர்தலுக்குள் இந்த சண்டை நிற்கவில்லை என்றால் ராமதாஸ் திமுகவிலும்
அன்புமணி அதிமுகவிலும் இருப்பார்கள்.