Share via:
கட்சி என்றாலே ஏதாவது உட்கட்சிக் குழப்பம், சண்டை, வெட்டு, குத்து
போன்றவை சகஜம். ஆனால், வழக்கத்துக்கு மாறாக அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான சண்டையில்
எப்போது வெட்டு குத்து நடக்குமோ என்று பா.ம.க. வட்டாரத்தில் பதற்றம் நிலவுகிறது. ராமதாஸ்
நியமனம் செய்யும் நபர்களை எல்லாம் அன்புமணியின் ஆட்கள் மிரட்டிவருவது பெரும் அச்சத்தை
ஏற்படுத்தியிருக்கிற்து.
இரண்டு பக்கமும் புதுப்புது நிர்வாகிகள் நியமனம் நடைபெறுவதையொட்டி
ஒவ்வொரு ஊரிலும் பதவிக்கு சண்டை நடந்துவருகிறது. இந்நிலையில் டாக்டர் ராமதாஸ், ‘’என்
மூச்சிருக்கும் வரை பாமக தலைவராக இருப்பேன். அவர் (அன்புமணி) செயல் தலைவராக இருப்பார்.
கட்சியின் வளர்ச்சிக்கு செயல் தலைவர் பொறுப்பு முக்கியமானது. ஆனால் அவர் செயல் தலைவர்
பொறுப்பை ஏற்க மறுக்கிறார். ஏற்றுக் கொண்டால் பிரச்சினை தீர்ந்துவிடும்.
நான் சுயம்புவாக உருவாக்கிய கட்சி பாமக. என் கட்சியினரை உயரத்தில்
வைத்துப் பார்த்து ரசித்துள்ளேன். என் மூச்சு நின்ற பிறகு அவர் தானே (அன்புமணி) தலைவர்
பொறுப்புக்கு வரப் போகிறார்.
திமுக தலைவர் கருணாநிதி சக்கர நாற்காலியில் இருந்தபோதுகூட கட்சிக்கும்,
ஆட்சிக்கும் தலைவராக இருந்தார். அப்போது ஸ்டாலின் முணுமுணுக்கவில்லை. என்னுடன் ஆரம்பத்தில்
இருந்து தன்னலம் பார்க்காமல் மக்களுக்கு உழைத்து, கட்சியை வளர்த்தவர்கள், ஒதுக்கப்பட்டவர்களுக்கு
பொறுப்பு கொடுத்து வருகிறேன். இது நிரந்தரப் பொறுப்பு எனவும் சொல்லி அவர்கள் அச்சத்தைப்
போக்கியுள்ளேன்.
எனது 60-வது மண நாள் விழாவுக்கு அன்புமணி வராதது வருத்தம்தான்.
வீட்டின் சுவரில் இருந்த அன்புமணியின் போஸ்டரை அகற்றியது எனக்குத் தெரியாது. விஷமிகள்
சிலர் கிழித்திருக்கலாம். அன்புமணியைச் சுற்றியுள்ள 5 பேர் குறித்து பதில் சொல்ல விரும்பவில்லை.
நிர்வாகக் குழு, மாநில செயற்குழு கூட்டப்பட்ட பிறகு, தேர்தல் நெருங்கும்போது பொதுக்குழு
கூட்டப்படும். யாருடன் கூட்டணி என்பதை பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துகளைக் கேட்டு
முடிவு செய்யப்படும்.
பல சோதனைகளைக் கடந்து பாமகவை வழி நடத்தி வருகிறேன். நான் கஷ்டப்பட்டதுபோல
இந்தியாவில் வேறு எந்த தலைவரும் கஷ்டப்பட்டிருக்க மாட்டார்கள். பதவியை விரும்பியிருந்தால்
எத்தனையோ பொறுப்புகள் கிடைத்திருக்கும். 4, 5 பிரதமர்களுடன் நெருங்கிப் பழகி இருக்கிறேன்.
பிரதமர் மோடியும் என்னுடன் நட்பாக இருக்கிறார்.
முருக பக்தர்கள் மாநாட்டுக்கு எனக்கு அழைப்பு வரவில்லை. அந்த மாநாட்டில்
பெரியார், அண்ணாவை விமர்சித்தது வருந்தக்கூடிய விஷயம். தமிழக மக்களுக்கு தொண்டு செய்த
தலைவர்களை, எந்த அரசியல் கட்சியும் கொச்சைப்படுத்தக் கூடாது. மாங்கனி விவசாயிகளின்
பிரச்சினைக்கு முதல்வர் ஸ்டாலின் தீர்வு காண்பார் என்று நம்புவோம். வன்னியர்களுக்கு
10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்காவிட்டால், தமிழகம் முழுவதும் பெரும் போராட்டம் நடத்தப்படும்’’
என்று கூறினார்.
ராமதாஸ் போடும் நிர்வாகிகளை அன்புமணியின் ஆட்கள் மிரட்டி வருவதால்
விரைவில் வன்முறை வெடிக்கும் என்கிறார்கள்.