Share via:
பாட்டாளி மக்கள் கட்சி யாருக்கு சொந்தம் என்ற பஞ்சாயத்தில் டாக்டர்
ராமதாஸ்க்கும், அன்புமணிக்கும் மோதல் எழுந்தது. எல்லா மாவட்டச் செயலாளர்களும் தன் பக்கம்
இருக்கும் தைரியத்தில் அன்புமணி ரொம்பவும் தெம்பாக அய்யாவுடன் மோதிவந்தார். ஆனால்,
நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. அதனால், இன்று அன்புமணி சரண்டர் ஆவார் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் திடீரென டாக்டர் ராமதாஸை
சந்திக்க வந்தார். அதோடு மற்ற மாவட்டச் செயலாளர்களும் ஒவ்வொருவராக வந்து சேர்கிறார்கள்.
டாக்டர் ராமதாஸ் என்ன சொல்கிறாரோ அதுவே வேத வாக்கு என்று வன்னியர் சங்கமும் அவர் பக்கம்
நிற்கிறது.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்
வேல்முருகனின் சகோதரர் திருமால்வளவன் நேற்றிரவு சந்தித்தார். வேல்முருகனை மீண்டும்
பாமகவில் இணைய ராமதாஸ் கோரிய நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது. அதேபோல காடுவெட்டி
குருவின் மகன் கனலரசனிடம் பாமகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அவரும்
பாமகவில் இணையும் பட்சத்தில், பாமக புதிய பரிமாணத்தில் பயணிக்க வாய்ப்புள்ளது.
இதற்கிடையே ராமதாஸ் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் தொடர்ந்து கட்சி
நடத்தமுடியாது எனும் நிலையில், அன்புமணி ராமதாஸ் இன்று ராமதாஸை சந்திப்பார் என்று சொல்லப்படுகிறது.
குடும்பச் சொத்தாகத் திகழும் பாமகவில் மகளுக்கும் மகள் பிள்ளைகளுக்கும் பங்கு பிரித்துக்
கொடுக்கப்படும். அதன் பிறகு நாடகம் முடிவுக்கு வரும்.