Share via:
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாமல் புறக்கணிப்பு
செய்திருக்கிறது. இந்த நிலையில் அ.தி.மு.க.வினர் எங்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்று
அன்புமணியும் சீமானும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி யாருக்கு
ஆதரவு தருவார் என்பது இப்போது கேள்வியாக இருக்கிறது.
கடந்த காலங்களில் நான் அ.தி.மு.க.வுக்கும் தே.மு.தி.க.வுகும் ஆதரவாக
பிரசாரம் செய்திருக்கிறேன். எனவே எனக்கு எடப்பாடி பழனிசாமியும் பிரேமலதாவும் ஆதரவு
தர வேண்டும் என்று சீமான் வெளிப்படையாகக் கேட்டு வருகிறார்.
அதேபோல் அன்புமணியும், ‘உங்களுக்கும் தி.மு.க. எதிரி. அவர்கள்
எங்களுக்கும் எதிரி. ஆகவே, அவர்களை அழிப்பதற்கு எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்’ என்று
கேட்கிறார்கள்.
அதேநேரம், இப்போது தேர்தலை சந்தித்திருந்தால், கள்ளக்குறிச்சி
கள்ளச்சாராயத்தை முன்வைத்து தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவு உருவாக்கியிருக்க முடியும்
என்பது அ.தி.மு.க.வினரின் ஆதங்கமாக இருக்கிறது. தோல்வி அடைந்தாலும் நிச்சயம் கெளரவமான
தோல்வியாக இருக்கும். தேவையில்லாமல் ஒரு நல்ல தேர்தலை எடப்பாடி பழனிசாமி இழந்துவிட்டார்
என்று அவரது கட்சியினர் வேதனைப்படுகிறார்கள்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் காரணமாக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில்
தி.மு.க.வுக்கு தோல்வி உண்டாக வாய்ப்பு இருக்கிறதா என்பதை சமீபத்தில் நடந்துமுடிந்த
நாடாளுமன்றத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் கட்சிகள் பெற்ற வாக்கு விகிதத்தைப்
பார்த்தாலே அறிய முடியும்.
இந்த தொகுதியில் தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள்
கட்சியின் வேட்பாளர் ரவிக்குமார் விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் 72,188 வாக்குகளைப்
பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக, அ.தி.மு.க. வேட்பாளர் பாக்கியராஜ் 65,365 வாக்குகளையும்
இங்கு போட்டியிட்ட பா.ம.க. 32,198 வாக்குகளும் பெற்றன.
அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. வாக்குகள் ஒன்று சேர்ந்தால் அது நிச்சயம்
தி.மு.க.வுக்கு பேரிழப்பாக இருக்கும். இது தவிட, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் இங்கு
8,352 வாக்குகளைப் பெற்றுள்ளார். ஆகவே, பா.ம.க.வுக்கு ஆதரவு காட்டினால் தி.மு.க.வை
அசைக்க முடியும்.
ஆனால், இதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு போதும் விரும்ப மாட்டார்.
ஏனென்றால் பா.ம.க. கடந்த தேர்தலில் வாங்கியதை விட குறைவாக வாங்கி தோற்க வேண்டும் என்றே
ஆசைப்படுவார். அப்போது தான் அ.தி.மு.க.வின் வலிமையைக் காட்ட முடியும். அடிமட்டத் தொண்டர்கள்
பணம் வாங்கிக்கொண்டு பா.ம.க.வுக்கு வேலைசெய்ய வாய்ப்பு உண்டு என்கிறார்கள்.
ஆனால், தி.மு.க. அமைச்சர்கள் இப்போதே களம் இறங்கி வேலை செய்வதால்
எளிதாக தி.மு.க. வெற்றி பெறும் என்பதே இன்றைய கள நிலவரம்.