Share via:

தற்போது பா.ஜ.க. கூட்டணியில் இருக்கும் பா.ம.க.வின் அன்புமணிக்கு
எம்.பி. பதவி முடிவுக்கு வருகிறது. தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆவதற்கு வாய்ப்பே
இல்லை என்பதால், மீண்டும் அ.தி.மு.க.வுக்குத் தாவப் போகிறார் என்பதை உண்மையாக்கும்
வகையில் பேசியிருக்கிறார் பா.ம.க. தலைவர் அன்புமணி.
பா.ஜ.க. வேண்டுமென்றே இந்தியைத் திணிக்கிறது என்று அண்ணாமலைக்கு
கண்டனம் தெரிவித்திருக்கும் அன்புமணி, ‘’பீகார், உத்தரப்பிரதேசத்தில் எங்கே இருக்கிறது
மும்மொழிக் கொள்கை..? அங்கே இருக்கும் மாணவர்கள் பாவம் இல்லையா..? முதலில் அங்கே நிறைவேற்றிவிட்டு
இங்கே வாருங்கள். உண்மையில் மாணவர்கள் மீது அக்கறை இருக்கிறது என்றால் நீட் தேர்வை
ரத்து செய்யுங்கள், இதனால் எத்தனையோ மாணவர்கள் இறந்து போயிருக்கிறார்கள். இதை செய்யாமல்
மும்மொழிக் கொள்கையைத் திணிப்பது வீண் வேலை.’’ என்று பாய்ந்திருக்கிறார்.
இந்த நேரத்தில் பா.ஜ.க. கூட்டணி குறித்து கேட்கையில், ‘’தேர்தலுக்கு
இன்னமும் 1 வருடம் இருக்கிறது, அப்போது கூட்டணியைப் பார்த்துக்கொள்ளலாம்…’’ என்று அசால்ட்டாக
பதில் சொல்லியிருக்கிறார்.
அதேபோன்று ரூபாய் குறியீடு மாற்றியது ஸ்டாலினுக்கு வேண்டாத வேலை
என்று அறிக்கை விட்ட அன்புமணி இன்றைக்கு, ‘’திமுக ஆட்சியில் எத்தனை பேருக்கு அரசு வேலை?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது பொய்யா… அமைச்சர் தங்கம் தென்னரசு சொல்வது பொய்யா?’’
என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டுகளில் எவ்வளவு பேருக்கு அரசு வேலை
வழங்கப்பட்டிருக்கிறது என்பது தொடர்பாக நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் தங்கம் தென்னரசு
வெளியிட்டுள்ள விவரங்களுக்கும். சில மாதங்களுக்கு முன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட
புள்ளிவிவரங்களுக்கும் இடையே மிகப்பெரிய முரண்பாடு நிலவுகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு அரசுத் துறைகளில் இதுவலர
57,016 அரசுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இது தவிர, பல்வேறு அரசுத்துறைகள் மற்றும்
உள்ளாட்சி அமைப்புகளின் வாயிலாக 21,866 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்று தங்கம்
தென்னரசு கூறியிருந்தார். ஆனால், கடந்த ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில்
110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,’’கடந்த 3 ஆண்டுகளில், தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர்
தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு முகமைகள் வாயிலாக 32 ஆயிரத்து
774 பேருக்கு பல்வேறு அரசுத் துறைகளில் நேரடிப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டன. அதேபோல்,
உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் போன்ற பல்வேறு அரசு அமைப்புகளில்
32 ஆயிரத்து 709 இளைஞர்கள் பணிநியமனம் பெற்றனர். மொத்தம் 65 ஆயிரத்து 483 இளைஞர்களுக்கு
கடந்த 3 ஆண்டுகளில் அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது ’’ என்று கூறியிருந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்ததற்கு பிந்தைய 8 மாதங்களில்
அரசுத் துறைகளில் வேலை பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்திலிருந்து 78 ஆயிரமாக
உயர்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதை மறுக்கவில்லை. ஆனால், கடந்த 8 மாதங்களில் மொத்தப்
பணியாளர்கள் எண்ணிக்கை 13 ஆயிரம் மட்டுமே உயர்ந்துள்ள நிலையில், அரசுத் தேர்வு முகமைகள்
மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வாறு 25 ஆயிரம் உயர முடியும்?
இருவரில் யார் சொன்னது சரி? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
தமிழத்தில் இதுவரை வழங்கப்பட்ட அரசு வேலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.’’
என்று கேட்டுள்ளார்.
ஒரே நேரத்தில் பா.ஜ.க.வையும் தி.மு.க.வையும் விமர்சனம் செய்கிறார்
என்றால் எடப்பாடி பழனிசாமியிடம் சரண்டர் ஆகிறார் அன்புமணி என்பதே உறுதியாகிறது.