Share via:

வக்பு வாரிய சட்டத்திருத்தம் மக்களவையில் 288 – 232 என்ற வாக்கு
வித்தியாசத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து நேற்று வக்பு வாரிய மசோதா மாநிலங்களவையில்
தாக்கல் செய்யப்பட்டது. அங்கேயும் எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்த விவாதம் கிட்டதட்ட 13 மணிநேரம் தொடர்ந்து நடந்தது.
இரவு 2 மணிக்கு மேல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 128 – 95 வாக்கு
வித்தியாசத்தில் மாநிலங்களவையிலும் வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மக்களவை,
மாநிலங்களவை என இரண்டிலும் நிறைவேற்றப்பட்ட மசோதா அடுத்ததாக இந்திய ஜனாதிபதி திரௌபதி
முர்முவிற்கு அனுப்பி வைக்கப்படும். இன்று அவர் ஒப்புதல் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படும்
நிலையில், உடனடியக இந்த மசோதா சட்டமாக நடைமுறைக்கு வரும்.
இந்த வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக அ.தி.மு.க.வினர்
வாக்களித்திருக்கிறார்கள். அதிமுகவைச் சேர்ந்த தம்பிதுரை, சி.வி.சண்முகம் உள்ளிட்ட
அதிமுக உறுப்பினர்கள் 4 பேரும் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.
அதேபோன்று ஓபிஎஸ் ஆதரவாளரான தர்மர் எம்.பி.யும் எதிர்த்து வாக்களிப்பு செய்திருக்கிறார்.
அதேநேரம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான ஜி.கே.வாசன்
வக்பு வாரிய சட்டத்திருத்த ஆதரவு கொடுத்திருக்கிறார். இவர் அ.தி.மு.க. ஆதரவுடன் எம்.பி.
ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றத்திற்கு வரவே மாட்டார் என்ற
குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்படும். நாட்டின் மிக முக்கியமான சட்ட திருத்தங்களின்
ஒன்றான வக்பு மசோதா மீதான வாக்கெடுப்பிலும் அன்புமணி கலந்து கொள்ளவில்லை. அதேபோன்று
இளையராஜா எம்.பி.யும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. மசோதா மீதான வாக்கெடுப்பில்
கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பது, அந்த மசோதாவிற்கு மறைமுக ஆதரவு தருவதாகவே பொருள் தரும்
என்பதால் அன்புமணி, ஜி.கே.வாசன் மற்றும் இளையரஜாவை முஸ்லிம் மக்கள் தங்கள் விரோதி என்றே
பார்க்கிறார்கள்.
சட்டமன்றத்தில் வக்பு சட்டத்திருத்தத்துக்கு எதிராக தீர்மானம்
கொண்டுவந்திருக்கும் தி.மு.க. அரசு இதற்காக நீதிமன்றம் செல்வதாகவும் கூறியிருப்பது
குறிப்பிடத்தக்கது.