Share via:
தமிழகம் வர இருக்கும் அமித்ஷா முன்னிலையில் பா.ம.க. கூட்டணிக்
கட்சியாக சேர்ப்பதற்குத் திட்டமிட்டிருந்த பா.ஜ.க.வின் திட்டத்தை செயல்படுத்த முயன்ற
குருமூர்த்திக்கு கெட் அவுட் சொல்லியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ். அதனால் அப்பா, மகன்
பஞ்சாயத்து இன்னமும் முடிவில்லாமல் சுற்றிக்கொண்டு இருக்கிறது.
பா.ம.க.வில் அன்புமணியைத் தாண்டி தன் மகளின் பிள்ளைகளை நுழைப்பதற்கு
டாக்டர் ராமதாஸ் தீவிர முயற்சி எடுத்துவருகிறார். இதனை அன்புமணி தொடர்ந்து முறியடித்துவந்தார்.
இந்நிலையில் சமாதானப்படுத்துவதற்கு குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் மேற்கொண்ட
முயற்சிகள் தோல்வியைத் தழுவியிருக்கிறது.
பாமகவில் அதிகாரப் போட்டி நிலவுகிறது. பாமக நிறுவனரான ராமதாஸ்,
தலைவர் என கூறிக்கொள்ளும் அவரது மகன் அன்புமணி ஆகியோருக்கு இடையே பாமகவும், அக்கட்சியின்
தொண்டர்களும் சிக்கி தவிக்கின்றனர். இவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் கவுரவத்
தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகளும், குடும்பத்து உறுப்பினர்களும் ஈடுபட்டுள்ளனர்.
அன்புமணியை மிரட்டுவதற்கு தன்னைவிட்டு பிரிந்து சென்றவர்களையும்
ஒருங்கிணைக்க ராமதாஸ் வியூகம் வகுத்துள்ளார். இதனால், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர்
வேல்முருகனின் சகோதரரும், அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவரான திருமால்வளவனையும்
வரவழைத்து ராமதாஸ் சந்தித்து பேசி உள்ளார். காடுவெட்டி குரு பிள்ளைகளையும் சந்திக்க
இருக்கிறார். இதையடுத்து அன்புமணி பதறிப் போய் ராமதாஸை சந்திக்க வந்தார்.
அன்புமணியுடன் அவருடன், அவரது 3-வது மகள் சஞ்சுத்ராவும் வந்திருந்தர்.
தைலாபுரம் வீட்டில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து ஆடிட்டர்
குருமூர்த்தி, முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி ஆகியோர் பாமக நிறுவனர் ராமதாஸை
சந்தித்துப் பேசினார்கள். இருவரும் 3 மணி நேரம்
ஆலோசனை நடத்திய பிறகும் ராமதாஸ் பிடிவாதமாக இருந்துள்ளார். ஆகவே, குருமூர்த்தியின்
சமாதான முயற்சி எடுபடவில்லை.
அன்புமணி நேரடியாக ராமதாஸிடம் சரண் அடைந்து மன்னிப்புக் கேட்கும்
வரையில் இந்த பஞ்சாயத்து முடியப்போவதில்லை என்கிறார்கள்.