Share via:
தி.மு.க. மகளிர் அணி சார்பில் தூத்துக்குடியில் நடைபெற்ற ‘கலைஞர் 100 வினாடி வினா’ போட்டியின் மண்டல அளவிலான இரண்டாம் கட்ட நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார்.
தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி எம்.பி. தலைமையில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டைக் கொண்டாடும் இன்று (டிச1.) திமுக மகளிர் அணி சார்பில் ‘கலைஞர் 100 வினாடி வினா’ போட்டியின் மண்டல அளவிலான இரண்டாம் கட்ட போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
வினாடி வினா போட்டியாளர்களுக்கு கனிமொழி எம்.பி. ஆறுதல் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
இந்நிலையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி பேசும்போது, ‘‘இந்த விளையாட்டில் போட்டியாளர்கள் பலரும் பாதுகாப்பாக விளையாட வேண்டும் என்பது தெரிகிறது. ஆனால் கலைஞர் எதையும் தைரியமாக எதிர்கொண்டு ஆடுவார், அதனால் தான் 5 முறை முதலமைச்சராகவும், நாடே போற்றும் மாபெரும் தலைவராக திகழ்ந்தார் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் எம்.சி.சண்முகையா, ஜி.வி.மார்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மண்டல அளவிலான இரண்டாம் கட்ட போட்டியில், 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான போட்டியில் சரவணா செல்வி, நடராஜன், சரண்யா திருநெல்வேலி அணியும், 18வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் அர்ச்சனா, அபிநயா, ஆதர்ஷினி கலந்து கொண்ட கன்னியாகுமரி அணியும் வெற்றி பெற்றது,
3 பேர் கொண்ட வினாடி வினா போட்டியின் அரையிறுதியின் வெற்றியாளர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள். அதன்படி இரு பிரிவுகளிலும் இறுதிச் சுற்று போட்டி நடைபெறும். இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு தலா ரூ. 10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
அதேபோல் 2ம் இடத்தை பிடிக்கும் இரு பிரிவுகளை சேர்ந்த அணிகளுக்கும் தலா ரூ.6 லட்சம் ரொக்கப் பரிசும், இரு பிரிவுகளிலும் 3ம் இடம் பெறும் அணிகளுக்கு தலா ரூ.3 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட உள்ளது. அதன்படி இறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரொக்கப் பரிசை வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.