Share via:
மத்திய உள்துறை அமிச்சர் அமித்ஷாவை எடப்பாடி வரவேற்பார் என்று
எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆர்.பி.உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜூ மட்டுமே வரவேற்பு
கொடுத்திருக்கிறார்கள். அண்ணாமலையும் அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியையும்
அதிமுகவையும் திட்டமிட்டு அவமதிப்பு செய்வதாகப் புகார் செய்யப்பட்டுள்ளது.
எடப்பாடியை டெல்லிக்கு வரவழைத்து அதிமுக கூட்டணியை உறுதி செய்தார்
அமித்ஷா. அந்த வழியில் இன்றைய தினம் அன்புமணி, பிரேமலதா ஆகியோரை மேடை ஏற்றுவதற்கு திட்டம்
போட்டிருந்தார். அண்ணாமலையும் அவரது ஆதரவாளர்களும் இன்னமும் தங்கள் அதிமுக எதிர்ப்பைக்
கைவிடவில்லை என்பதால் எடப்பாடி பழனிசாமி இந்தக் கூட்டத்தை புறக்கணித்தார். இதையடுத்து
கூட்டணி பேச்சுவார்த்தை தள்ளிப் போயிருக்கிறது. அதேநேரம் அண்ணாமலைக்கு எதிரான கோஷ்டிகளுக்கு
இன்றைய தினம் அழுத்தமான முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தெரிகிறது.
மதுரையில் நடக்கவிருக்கும் பல்வேறு நிகழ்வுகளில் பங்குபெற்று சிறப்பிக்கவிருக்கும்
அமித்ஷாவை எல்.முருகன், தமிழிசை, வானதி சீனிவாசன், அண்ணாமலை ஆகியோர் சந்தித்தார்கள். அந்த நேரத்தில் அண்ணாமலைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அதேநேரம் அமித்ஷாவுக்கு வரவேற்பு கொடுத்த ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் அண்ணாமலை குறித்து நேரில் புகார் கூறியிருக்கிறார்கள்.
கோவை இளையராஜாவை சந்தித்து காலை தொட்டு வணங்கிய அண்ணாமலை
“பிரதமர் மோடி, கருணாநிதி, ஸ்டாலின் என அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் அன்பு
செலுத்தும் ஒரே தலைவர் இளையராஜா’’ என்று பேசினார். இதில் எடப்பாடி பழனிசாமியின் பேரைச்
சொல்லவில்லை. கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரின் பேரைச் சொல்லிவிட்டு எடப்பாடியை புறக்கணித்த
விவகாரம் கூட்டணியில் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. அதேபோல் தொடர்ந்து எடப்பாடி
குறித்து அண்ணாமலை ஆதரவாளர்கள் வன்மம் கக்குவதும் ஆதாரத்துடன் கூறியிருக்கிறார்கள்.
தேவை இல்லாமல் அண்ணா பல்கலை பாலியல் வழக்கில் தலையிட்டு இரண்டு
நாட்களில் அடுத்த தகவல் வெளியிடுவோம் என்று சொல்லிவிட்டு காணாமல் போய்விட்டார். ஆகவே,
தமிழ்நாட்டில் இருந்து அண்ணாமலை அப்புறப்படுத்தப்பட்டால் மட்டுமே கூட்டணி இணக்கமாக
செயல்பட முடியும் என்று அதிமுக தலைவர்கள் நேரடியாக அமித்ஷாவிடம் புகார் கூறியிருக்கிறார்கள்.
இன்றைய தினம் கட்சி நிர்வாகிகளை சந்தித்துவிட்டு, இந்த விவகாரத்தில் தீர்க்கமான முடிவு
எடுக்கப்படும் என்று தெரியவருகிறது.