Share via:
அடங்கமறு அத்துமீறு
என்று வீராவேசம் பேசிய திருமாவளவன் பதிவை டெலிட் பண்ணிட்டு ஓடியது மட்டுமின்றி இன்று
ஸ்டாலினை சந்தித்து மதுவிலக்கு மாநாட்டுக்கு அழைப்பு விடுத்ததும் சமூக வலைதளத்தில்
கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியிருக்கிறது.
மதுவிலக்கு கொள்கைக்காக
கூட்டணியில் விரிசல் வந்தாலும் பரவாயில்லை என்றெல்லாம் பேசிய திருமாவளவன் இன்று கமுக்கமாக அண்ணா அறிவாலயத்தில்
காத்திருந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்துத் திரும்பிவிட்டார். இது குறித்து செய்தியாளர்களிடம்,
‘’தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும், அரசமைப்புச் சட்ட
உறுப்பு எண் 47ன்-படி தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்கிட ஒன்றிய அரசை வலியுறுத்த
வேண்டும்” ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தேன். விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும்
மது விலக்கு மாநாட்டில் திமுக பங்கேற்கிறது..’’ என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார்.
அதேநேரம், ‘ஆட்சியிலும்
அதிகாரத்திலும் பங்கு’ குறித்து எதுவும் பேசவில்லை என்றும் ஒப்புக்கொண்டார். ஆனால்,
அவரது கட்சியினரோ, ‘’விசிக மாநாட்டில் அமைப்புச் செயலாளர் .ஆர்.எஸ்.பாரதி அவர்களும்
செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களும் பங்கேற்பதாக முதல்வர் அறிவித்திருக்கிறார்.
மது ஒழிப்பு எனும் இலக்குக்காக நடத்தப்படும் மாநாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்
திமுக பங்கேற்பது விடுதலைச்சிறுத்தைகளின் மது ஒழிப்பு நிலைப்பாட்டுக்கும் போராட்டத்துக்கும்
கிடைத்த வெற்றி’ என்று பதிவிட்டுள்ளார்கள்.
இதையடுத்து அ.தி.மு.க.
தொடங்கி பா.ம.க., நாம் தமிழர் போன்ற கட்சிகள் திருமாவைப் பற்றி மீம்ஸ் போட்டு தெறிக்க
விடுகிறார்கள். இதுகுறித்து சீமான், ‘’ஆட்சியில் பங்கு தர விருப்பம் இல்லை என்றால்
தனியாக நின்று திருமாவளவன் வெற்றிப் பெற்றிருக்க வேண்டும். நீங்கள் ஒன்றிய அமைச்சரவையில்
எப்படி பங்கு பெற்றீர்களோ அது போல எங்களுக்குக் கொடுங்கள்‘’ என்று கேளுங்கள் என்று
மீண்டும் தூண்டிவிட்டுள்ளார். அவரது கட்சியினரோ, ‘’அப்படியே சனாதன
எதிர்ப்பு மதவாதத்துக்கு எதிராக
ஒரு மாநாடு போட்டு, அதில் பங்கேற்க பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு அழைப்பு விடுத்து,
மதவெறிக்கு எதிராக சர்வதேச அளவில் ஒரு மசோதாவைக் கொண்டுவர ஐ.நா.வுக்கு அழுத்தம் கொடுத்தால்
இன்னும் பொருத்தமாக இருக்கும் திருமா அண்ணே’’ என்று கிண்டல் அடிக்கிறார்கள்.
மேலும், ‘இந்த மாநாட்டில்
ஆர்.எஸ்.பாரதி. டி.கே.எஸ். இளங்கோவனுக்குப் பதிலாக சாராய ஆலை அதிபர்கள் டி.ஆர்.பாலு,
ஜெகத்ரட்சகன் கலந்துகொண்டால் சிறப்பாக இருக்கும். அதேபோல், மது வாடை அறியாத சி.வி.சண்முகம்,
அண்னன் சீமானை எல்லாம் அழைக்க மறந்துடாதீங்க என்று விஜய் கட்சியினரும் கிண்டல் செய்கிறார்கள்.
ஒரு சாண் வயித்துக்காக
திருமா என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது… பரிதாபம்தான்.