Share via:
திமுகவுக்கு முடிவுரை எழுதுவோம் என்று பொதுக்கூட்டத்தில் முழங்கிய அமித்ஷா, இன்று கனிமொழிக்கு
பிறந்த நாள் வாழ்த்து கூறியிருப்பது பாஜக மற்றும் திமுகவினரை அலற விட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் எப்பாடு பட்டாவது, எப்படியாவது திமுக
ஆட்சியை ஒழித்துக் கட்டுவோம். இந்தியாவில் ஊழல் நிறைந்த கட்சி, ஆட்சி என்றால், அது
தமிழகத்தின் திமுக ஆட்சி தான் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நடத்திய தமிழகம் தலைநிமிர
தமிழனின் பயணத்தின் நிறைவு விழா பொதுக்கூட்டம் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய அமித்ஷா, ‘’கொடுத்த வாக்குறுதி பட்டியலில்
குறைவான வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றிய அரசு ஒன்று உண்டென்றால் அது தமிழகத்தில்
உள்ள திமுக அரசு தான். தமிழகத்தில் தமிழக பெண்கள் தாய்மார்களின் பாதுகாப்பிற்கு எந்த
உத்திரவாதமும் இல்லை. தமிழக அரசுக்கு ஒரே ஒரு எண்ணம் தான். அது ஸ்டாலின் மகன் உதயநிதியை
முதல்வர் ஆக்கவேண்டும் என்பது தான். நான் இன்று தமிழக மக்களுக்கு இதை கூற வந்துள்ளேன்.
தமிழகத்தில் நடந்து வரும் குடும்ப அரசியலை ஒழித்துக்கட்ட நேரம் வந்துவிட்டது.
தமிழகத்தில் 2026 ஏப்ரலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மலரும்.
பாஜக, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சேர்ந்து வலுவான கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கப்
போகிறோம். எப்பாடுபட்டாவது, எப்படியாவது திமுக ஆட்சியை ஒழித்துக் கட்டுவோம்.
தமிழகத்தில் ஒரு குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது.
கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின், அவருக்கு பிறகு உதயநிதி என திட்டம் போடும் ஸ்டாலின்
கனவு நிறைவேறாது. இந்த முறை 2026-ல் கண்டிப்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தான்
அமையப் போகிறது. அதிமுக- பாஜக கூட்டணி இயற்கையான வெற்றிக் கூட்டணி. 1998, 2019,
2021 தேர்தல்களில் இணைந்தே களம் கண்டோம். 2024 மக்களவைத் தேர்தலில் தனித்தனியாக தேர்தலை
சந்தித்தோம் என்றாலும், இருகட்சிகளின் மொத்த வாக்குகளை கணக்கிட்டால் 26 தொகுதிகளில்
வெற்றி பெற்றிருப்போம்…’’ என்று பேசியிருக்கிறார்.
உதயநிதியை ஆட்சியில் அமர விட மாட்டோம் என்று கூறியிருக்கும் அமித்ஷா
இன்று கனிமொழி பிறந்த நாளையொட்டி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதேநேரம், இன்று கனிமொழி
பிறந்த நாளுக்கு வெளியாகியிருக்கும் வீடியோவில் 2026 தேர்தலில் கனிமொழி போட்டி என்று
வருகிறது. அதோடு, கனிமொழியை முதல்வர் நாற்காலியில் கருணாநிதியும் உதயநிதியும் உட்கார
வைப்பது போன்ற காட்சிகளும் வருகின்றன
இதெல்லாம் திட்டமிட்டு செய்யப்பட்டதா, உதயநிதி முதல்வர் இல்லையா
என்றெல்லாம் திமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.