Share via:

அமித்ஷா இரண்டு நாட்களில் தமிழகம் வருவார், அதன் பிறகு மிகப்பெரும்
அரசியல் மாற்றம் நடைபெறும் என்று அண்ணாமலை அறிவிப்பு செய்திருந்தார். அதேபோன்று சி.ஐ.எஸ்.எஃப்
56-வது ஆண்டு எழுச்சி தினக் கொண்டாட்டத்தையொட்டி, தக்கோலம் பயிற்சி மையத்தில் நடைபெறும்
விழாவில் கலந்துகொள்வதற்காக தனி விமானம் மூலமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அரக்கோணம்
வந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலுள்ள தக்கோலத்தில் மத்திய
தொழில்துறை பாதுகாப்புப் படையின் (சி.ஐ.எஸ்.எஃப்) ஆட்சேர்ப்பு பயிற்சி மையம் (ஆர்.டி.சி)
செயல்பட்டு வருகிறது. ராஜாதித்ய சோழன், முதலாம் பராந்தகச் சோழரின் மகன். 948 – 949
இடைப்பட்ட காலத்தில் நடந்த தக்கோலப் போரில், ராஜாதித்ய சோழனின் உயிர் பறிக்கப்பட்டது.
போரில் தோற்றாலும், ராஜாதித்யனின் வீர மரணம் தமிழர்களின் மனதில் முத்திரை பதித்தது.
தக்கோலப் போர் நடந்த அன்றைய இடம்தான் சி.ஐ.எஸ்.எஃப் மையம் அமைந்துள்ள இன்றைய தக்கோலம்
என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் இருந்து தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு துப்பாக்கி
சுடுதல், பாதுகாப்புப் பணிகள், சட்டம் – ஒழுங்கு உள்ளிட்ட பல பிரிவுகளில், இங்கு பயிற்சி
அளிக்கப்படுகிறது. பயிற்சிக்குப் பிறகு விமான நிலையங்கள், அனல்மின் நிலையங்கள், தேர்தல்
பாதுகாப்பு, வி.ஐ.பி பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இந்த பயிற்சி மையத்துக்கு ‘ராஜாதித்ய சோழன்’ பெயரைச் சூட்டி, பிப்ரவரி 24-ம் தேதி அதிகாரபூர்வ
அறிவிப்பையும் வெளியிட்டது மத்திய அரசு.
இன்றைய விழாவில் பேசிய அமித் ஷா, “நாடு முழுவதும் உள்ள சி.ஐ.எஸ்.எஃப்
பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்
கொள்கிறேன். நாட்டில் சீரான போக்குவரத்து மற்றும் பாதுகாப்பான இயக்கத்தை உறுதி செய்வதில்
சி.ஐ.எஸ்.எஃப் முக்கிய பங்கு வகிக்கிறது. சி.பி.எஸ்.எப். தேர்வு பிரதமர் நரேந்திர மோடி
வந்த பிறகு தான் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய
அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
இந்தி ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்ட தேர்வு
பா.ஜ.க. ஆட்சிக்கு பிறகு பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தமிழ்,
தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்பூரி, மற்றும் கொங்கனி ஆகிய மொழிகளிலும் நடத்த
உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பொறியியல், மருத்துவம் படிப்புகளை தமிழில்
கற்பிக்க நடவடிக்கை எடுங்கள் என்று நீண்ட காலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்தி
வருகிறேன்” என்று பேசினார்.
அமித் ஷா பேச்சை பா.ஜ.க.வினர் உடனடியாக வைரலாக்கினார்கள். ஆனால்
அதற்கு தி.மு.க.வினர் அமித் ஷா சொல்வது பச்சைப் பொய் என்பதை அம்பலப்படுத்தி விட்டார்கள்.
அதாவது, பாஜக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வு எழுத்து
முறையில் 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்பட்டு தான் வந்துள்ளது. 2016ல் கணினி முறை
தேர்விற்கு மாறிய பிறகு 2024ல் தான் 13 பிராந்திய மொழிகளில் மீண்டும் நடத்தப்படும்
என அறிவிக்கப்பட்டது. 2018 முதல் 2023 வரை வெளியிடப்பட்ட தேர்வுக்கான அறிவிப்பில்,
இந்த தேர்வு ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தேர்வுகள் மாநில மொழிகளில் நடைபெற வேண்டுமென பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து,
முன்பிருந்தபடியே பிராந்திய மொழிகளும் இணைக்கப்பட்டு உள்ளன.
ஆக, தமிழில் இருந்த தேர்வை தடுத்து நிறுத்திய மோடி, மீண்டும் அதற்கு
அனுமதி கொடுத்திருக்கிறார். இதுக்கு எதுக்குய்யா இந்த பில்ட்ப் என்று கிண்டல் செய்கிறார்கள்.
அதோடு, தமிழில் இன்ஜினியரிங், மருத்துவம் போன்றவை ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால், ஆங்கிலமே சரியாக இருக்கும் என்பதால் நிறுத்தப்பட்டது. எதை எந்த மொழியில் கற்க
வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும் என்று அமித்ஷா பொய்யை அம்பலப்படுத்தி வருகிறார்கள்.
இந்த விவகாரம் எல்லாம் தெரிந்து வேண்டுமென்றே அமித் ஷாவை அண்ணாமலை
இழுத்துவிட்டதாகவும் கூறுகிறார்கள். இந்த தகவல் அறிந்து அண்ணாமலையை அமித் ஷா கண்டித்திருக்கிறாராம்.
தேவையா அண்ணாமலை..?