Share via:
வருகிற 2026ம் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்று அக்கட்சி தெளிவுப்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகத்தை ஆரம்பித்த விஜய்யின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்துள்ளது தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள் மட்டுமல்லாமல், அதனுடன் கூட்டணி வைத்துள்ள தேசிய கட்சிகளையும் யோசிக்கவைத்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக்கழகம் நடத்திய முதல் மாநில மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக வெற்றிக்கழக கொடி விளக்கம், முக்கிய நிர்வாகிகள் அறிமுகம் என்று மட்டுமே நகர்ந்தது. மேலும் தி.மு.க. அரசை மிகவும் வெளிப்படையாக விமர்சனம் செய்து கண்டனம் தெரிவித்தார் த.வெ.க. தலைவர் விஜய்.
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கோட்பாட்டின்படி தி.மு.க.வை வீழ்த்த த.வெ.க. தலைவர் விஜய் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பார் என்று சமூகவலைதளங்களில் செய்தி தீயாய் பரவி வந்தது. அதற்கு அ.தி.மு.க. மறுப்பு தெரிவித்த நிலையில் த.வெ.க. தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் அ.தி.மு.க. வுடன் கூட்டணி கிடையாது என்றும், தமிழகத்தில் நல்ல அரசை மேற்கொள்வதும், பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவதே இலக்கு என்று தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் மக்களை குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக்கழகம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான கருத்துக்களை செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.