Share via:
கலைமாமணி டெல்லி கணேஷ் தன்வாழ் நாளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நகைச்சுவை, வில்லன், குணச்சித்திரம் என்று எந்த கதாபாத்திரம் என்றாலும் அவரின் நடிப்பு தனிமுத்திரை பதித்துவிடும். அவர் நடிப்பில் வெளியான அவ்வை சண்முகி, நாயகன், காதலா காதலா, சங்கமம் உள்ளிட்ட எந்த திரைப்படத்தையும் அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமான தன்னால் அவர்கள் அளவுக்கு நட்சத்திர நடிகர் ஆக முடியவில்லை என்ற ஆதங்கத்துடன் பல பேட்டிகளில் வருத்தத்துடன் பகிர்ந்து கொண்ட காலமெல்லாம் உண்டு.
இந்நிலையில் 81 வயதான டெல்லி கணேஷ், வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தனது வீட்டில் நள்ளிரவில் உறக்கத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டிலேயே வைக்கப்பட்டிருந்தது. அவரின் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.
விமானப்படை அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்த டெல்லி கணேஷூக்கு நடிப்பின் மீது இருந்த தீராத காதல் அவரை சினிமாவுக்குள் அழைத்து வந்துள்ளது. டெல்லியில் பல மேடை நாடகங்களில் சிறு சிறு வேடங்களை தொடர்ந்து பல்வேறு வேடங்களை அபாரமாக நடித்ததால், கணேஷ் என்ற அவரது பெயர் டெல்லி கணேஷ் என்று மாறிப்போனது.
தமிழ் திரையுலகில் குணச்சித்திர நடிகர்களுக்கு சரியான அங்கீகாரமோ, விருதுகளோ வழங்கப்படுவதில்லை என்று தனது ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரின் உயிரிழப்பு ஒட்டுமொத்த திரையுலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து டெல்லி கணேஷின் உடலுக்கு விமானப்படை வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். விமானப்படை மற்றும் இந்திய தேசியக்கொடியை அவர் உடலின் மீது போர்த்தி அதன் பின்னர் அந்த கொடியை அவர் மனைவியிடம் ஒப்படைத்தனர்.
இறுதியாக டெல்லி கணேஷின் இறுதி ஊர்வலம் சென்னை ராமாபுரத்தில் இருந்து தொடங்கி, நெசப்பாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் உறவினர்கள், நண்பர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.