Share via:
விஜயகாந்த் ஏழெட்டு வருடங்களாகவே உடல் சரியில்லாமல் இருந்து
வருகிறார். அவர் சினிமாவில் நடித்து கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. அரசியலில்
எதிர்க்கட்சித் தலைவர் என்பது தவிர எந்த பதவியும் கிடையாது.
சினிமாவிலும் அவர் காலத்தில் ரஜினி, கமல்ஹாசனுக்கு பின்னே இருந்தாரே
தவிர, ஒருபோதும் முதல் நட்சத்திரமாக இருந்ததில்லை. ஆனாலும், அவரது மரண ஊர்வலத்திற்குக்
கூடிய கூட்டம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கிவிட்டது.
ரஜினிகாந்த் கூறியது போன்று அவர் அரசியல்வாதிகளை திட்டினார்,
அதிகாரிகளை திட்டினார், பத்திரிகையாளர்களை திட்டினார் என்றால் அவற்றில் எதுவுமே சுயநலம்
இருக்காது. அதனால் அவர் மீது யாருமே கோபம் கொள்ள முடியாது என்று மனம் திறந்து பேசினார்.
அதனால்தானோ என்னவோ, இத்தனை மக்களின் மனதை கொள்ளையடித்திருக்கிறார்.
எம்.ஜி.ஆருக்குப் பிறகு எத்தனையோ மரணங்களை தமிழகம் கண்டுள்ளது. குறிப்பாக சிவாஜி கணேசன்,
கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரை எல்லாம் சொல்லலாம். இத்தனைக்கும் ஜெயலலிதா தமிழக முதல்வராக
இருந்த நேரத்தில் மறைந்தார்.
ஆனாலும், இவர்களை எல்லாம் மிஞ்சி மக்கள் மனதில் விஜயகாந்த் இடம்
பிடித்திருக்கிறார் என்பது ஆச்சர்யமான உண்மை. அதனால்தான் அவர் கட்சி தொடங்கியதும் மக்கள்
பேராதரவு கொடுத்தார்கள். மக்களுடன் கூட்டணி என்று சொன்னவர் அ.தி.மு.க.வுடன் கூட்டு
வைத்த பிறகே அவருக்கு ஆதரவு குறைந்தது.
மக்கள் வாக்கு செலுத்தவில்லையே தவிர, அவர்களுடைய நெஞ்சத்தில்
விஜயகாந்த் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பதையே இந்த மரணத்துக்குக் கூடிய கூட்டம்
சுட்டிக்காட்டியிருக்கிறது.
கோயம்பேடு தே.மு.தி.க. தலைமையகத்தில் போதிய வசதி இல்லையென்பதை
அறிந்ததும் உடனடியாக தீவுத்திடலுக்கு உடம்பை கொண்டுசென்று, மக்கள் பார்வையிடவும், ஊர்வலமாக
சென்று இறுதி சடங்கை சிறப்பாக செய்வதற்கும் ஸ்டாலினும் உதயநிதியும் தேவையான அத்தனை
உதவிகளையும் செய்து கொடுத்ததில், தமிழக அரசுக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கிறது
கேப்டனுக்கு வீர வணக்கம்.

