Share via:
காதலித்து திருமணம்
செய்துகொண்ட ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி பிரிவு தமிழகத்தில் பெரும் அதிர்வை உண்டாக்கியது.
அவரது மாமாவும் பிரபல இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து அதை விட பெரிய பூகம்பத்தைக்
கிளப்பியிருக்கிறது. இசையமைப்பாளர் இமானும் விவாகரத்து செய்திருப்பதால், இசையமைப்பாளர்களுக்கு
என்ன பிரச்னை என்ற கேள்வி எழுந்துள்ளது.
இப்போது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு
57 வயது. சிறுவயது முதலே இசைக் கருவிகள் வாசிப்பதில் ஆர்வம் கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் தந்தை
சேகரிடமிருந்து இசை நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தவர். தந்தை மறைவுக்குப் பிறகு எம்.எஸ்.
விஸ்வநாதன், இளையராஜா ஆகியோரின் இசைக்குழுவில் பணியாற்றியுள்ளார். பள்ளிக்கல்வியைக்கூட
முடிக்காதவர், லண்டன் இசைக் கல்லூரியில் ஸ்காலர்ஷிப் பெற்று இசை கற்றவர்.
விளம்பரப் படங்களுக்கு
டியூன் போட்டுக் கொண்டிருந்தவர், இயக்குநர் மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம்
1992ம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்தில் இருந்தே ஹிட் அடித்தார்.
தனது 32 ஆண்டுகால இசை வாழ்க்கையில் ஆஸ்கர், கிராமி உள்ளிட்ட உலகின் உயரிய பல விருதுகளை
வென்றுள்ளார்.
ஒற்றுமையான தம்பதியராக
வலம் வந்த ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மனைவி சாய்ரா பானுவும் 29 ஆண்டு கால திருமண பந்தத்தில்
இருந்து வெளியேறுவதாக அறிவித்தது தமிழகத்தைக் குலுக்கிவிட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா
பானு தம்பதி சார்பில் வழக்கறிஞர் வந்தனா ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒருவரை
ஒருவர் ஆழமாக நேசித்தாலும், இருவரின் பந்தத்தில் ஒருவித அழுத்தம் இருந்தது. இருவருக்கும்
நடுவே இட்டு நிரப்ப முடியாத அளவுக்கு இடைவெளி ஏற்பட்டுள்ளது. இருவராலும் அந்த இடைவெளியை
குறைக்க முடியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள்
30 ஆண்டுகளை நிறைவு செய்வோம் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அனைத்துமே எதிர்பாராத முடிவுகளைத்தான்
கொண்டுள்ளன. கடவுளின் சிம்மாசனம்கூட உடைந்த இதயங்களினால் நடுங்கும். மேலும், உடைந்தவை
மீண்டும் சேராது. இந்த இக்கட்டான சமயத்திலும் உங்கள் அன்பிற்கும், எங்கள் தனியுரிமையை
மதித்ததற்கும் நன்றி” என்று ரஹ்மான் பதிவிட்டுள்ளார்.
இவர்களுக்கு கதீஜா,
ரஹிமா ஆகிய இரு மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர். ஏ.ஆர். அமீன், தனது இன்ஸ்டா
வலைதள பக்கத்தில் “இந்த நேரத்தில் எங்கள் தனியுரிமையை மதிக்குமாறு அனைவரையும்
கேட்டுக்கொள்கிறோம்…” என்று பதிவிட்டுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் பெரும்பாலும்
இரவு நேரத்தில் மட்டுமே பணியாற்றுவார் என்பது அனைவருக்கும் தெரியும். இசை மீது அவருக்கு
இருக்கும் ஆர்வம் மனைவி, பிள்ளைகள் மீது இல்லை என்று கூறப்பட்டாலும் இது உண்மையல்ல.
ஏனென்றால் இந்த வாழ்வுக்கு சாய்ராவும் பழகிவிட்டார். பிள்ளைகள் திருமண விவகாரத்தில்
தம்பதியருக்குள் உண்டான பிரச்னையே பிரிவு வரை போயிருப்பதாகச் சொல்கிறார்கள். எதுவாக
இருந்தாலும் அவர்கள் தனியுரிமையை மதிப்போம்.
கோடிக்கணக்கான மக்களின்
காதல் வலிக்கு இசை அமைத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். அவர் இனி வலியின்றி வாழட்டும்.