Share via:
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்யும் வகையில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கொடியசைத்து திறந்து வைத்தார்.
வரலாறு காணாத பேரிழப்பை ஏற்படுத்திய மிக்ஜாம் புயல் சென்னையை உருக்குலைய செய்துவிட்டது. தெருக்களில் மரங்கள் வேரோடு சாய்ந்த நிலையில் மின்சாரம் தண்டிக்கப்பட்டது. தெருக்களில் காட்டாற்று வெள்ளம் போல் பாய்ந்தோடிய மழைநீர், வீடுகளுக்குள் புகுந்தது. அதோடு சேர்த்து கழிவுநீரும் புகுந்ததால் மக்களால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் குடிநீர், உணவின்றி தவித்தனர்.
இந்நிலையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதி பொதுமக்களுக்கு தோட்டக்கலை துறையின் சார்பில் நடமாடும் வாகனங்கள் மூலம் மலிவு விலையில் காய்கறிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்களை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக விற்பனைக்கு எடுத்து செல்லப்பட்ட காய்கறிகளை ஆய்வு செய்த அமைச்சர், துரிதமாக காய்கறிகள், பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வின் போது வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் அபூர்வா, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்குநர் நடராசன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.