Share via:
முதலமைச்சர் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரம் குறித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொதுக்கூட்டம் நடத்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வான குமரகுரு கடந்த மாதம் (செப்.) 19ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார்.
இதனால் கொதித்தெழுந்த தி.மு.க.வினர் குமரகுருவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி பின்னர் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுரு தனது எக்ஸ் பக்கத்தில், நான் தவறுதலாக பேசிவிட்டதாகவும், வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் பதிவிட்ட நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது.
இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. முன்ஜாமீன் கோரினார். இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், ‘‘முதல்வர் குறித்து பொதுவெளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது கண்டனத்திற்குரியது என்று கூறிய நீதிமன்றம், இது குறித்து பொதுக்கூட்டம் நடத்தி பொதுவெளியில் குமரகுரு மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று கூறியது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவையடுத்து விரைவில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுரு தலைமையிலான பொதுக்கூட்டம் கூட்டப்பட்டு பகிரங்கமாக மன்னிப்பு கேட்கப்படும் என்று தெரியவந்துள்ளது.
