Share via:
அ.தி.மு.க.வின் 52வது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று (அக்.18) சங்கரன் கோவிலில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.
அ.தி.மு.க.வின் 52வது ஆண்டு விழா நேற்று (அக்.17) தமிழகமெங்கும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சிக் கொடியேற்றி, முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
அதைத்தொடர்ந்து இன்று சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் முன்பு உரை நிகழ்த்த உள்ளார்.
பொதுக்கூட்டத்திற்காக சங்கரன்கோவில்- சேர்ந்தமரம் சாலையில் திறந்தவெளி மைதானத்தில் பிரமாண்டமான பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணியை விழா ஏற்பாட்டாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி இன்று விமானம் மூலம் காலை 11 மணியளவில் தூத்துக்குடி செல்கிறார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் நெல்லை வழியாக சங்கரன்கோவிலை சென்றடைகிறார். இதற்கிடையிடல் எடப்பாடி பழனிசாமிக்கு பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் மேம்பாலத்தில் வைத்து கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.