Share via:
பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சீரமைக்கப்பட்ட ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை கனிமொழி எம்.பி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 4 தென் மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் பெய்த கனமழை பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு எடுத்த துரித நடவடிக்கையால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
அதைத்தொடர்ந்து தமிழக அரசு, அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள். இதன் தொடர்ச்சியாக தமிழக அரசு சார்பில் நிவாரணநிதியும் வழங்கப்பட்டது.
இப்பெருமழை வெள்ளத்தில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் ஆன்சைட் அருங்காட்சியகமும் பெரியளவில் பாதிக்கப்பட்டது. அங்கு காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த புராதன பொருட்கள் மழை வெள்ளத்தில் சேதமடைந்தது. இதைத்தொடர்ந்து வெள்ள நீர் அகற்றப்பட்டு, சீரமைக்கப்பட்ட நிலையில் மீண்டும் பொதுமக்கள், மாணவ-மாணவிகளின் பார்வைக்காக திறக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஜன.4) திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேறகொண்டார். இந்த ஆய்வின் போது ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி ஷி.அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.