Share via:
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழக காங்கிரஸ் கட்சிக்குத்
தலைவராக வந்திருக்கிறார் செல்வப்பெருந்தகை. பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்த தலைவர்கள்
இப்போது செல்வப்பெருந்தகை மீது வழக்கம் போல் புகார் கடிதங்கள் அனுப்பத் தொடங்கிவிட்டனர்.
அதில் முக்கியமானது என்ன தெரியுமா..? அவர் ஏராளமான கட்சிகள்
மாறியிருக்கிறார் என்பதுதான். முதன்முதலாக பூவை மூர்த்தியார் கட்சியில் இணைந்து பணியாற்றினார்.
அதன் பிறகு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து
வெளியேறி, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கட்சியில் சேர்ந்தார். அங்கேயும் ஜாதி பஞ்சாயத்து
எழுந்தது. ஆகவே, புதிய தமிழகம் கட்சியில் இருந்து வெளியேறி விடுதலை சிறுத்தை கட்சியில்
தன்னை இணைத்துக்கொண்டார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் தனக்கு முன்னேறுவதற்கு வாய்ப்பு
இல்லை என்று தெரியவரவே, ஒரு கட்டத்தில் அங்கிருந்து வெளியேறி பகுஜன் கட்சியில் சேர்ந்தார்.
அந்த கட்சிக்கு தமிழகத்தில் எந்த வாய்ப்பும் இல்லை என்றதும் வேறு வழியின்றி பா.சிதம்பரத்திடம்
அடைக்கலமானார்.
சிதம்பரத்தின் ஆதரவாளராகவே காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் செல்வப்பெருந்தகை.
ஆனால், ஒரு கட்டத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கும் செல்வப்பெருந்தகைக்கும் முட்டிக்
கொண்டது. ஆகவே, சிதம்பரம் ஆதரவாளர் என்ற பட்டியலில் இருந்து வெளியே வந்தார்.
காங்கிரஸ் கட்சியில் அழகிரி கோஷ்டி, திருநாவுக்கரசர் கோஷ்டி,
இ.வி.கே.எஸ். கோஷ்டி, தங்கபாலு கோஷ்டி, செல்லக்குமார் கோஷ்டி, மாணிக்கம்தாகூர் கோஷ்டி
போன்ற எதிலும் சிக்கிக்கொள்ளாமல் எல்லா பக்கமும் நல்ல பிள்ளையாக நடந்துகொண்டார். அதனானோ,
பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக மாறியிருக்கிறார்.
இந்த விவரங்கள் எதுவும் தெரியாமல் ராகுல் காந்தியை ஏமாற்றி பதவியை
வாங்கிவிட்டார்கள் என்று எதிர்குரூப் கொந்தளிக்கிறது. எப்படியோ, இங்கேயும் கோபித்துக்கொண்டு
வேறு கட்சிக்கு ஓடாமல் இருந்தால் சரிதான்.