Share via:
நடிகர்கள் அரசியல்வாதிகளை பகைத்துக் கொள்ளக்கூடாது ஜனசேனா கட்சித் தலைவர் பவன்கல்யாண் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். இதற்கு மகிழ்ச்சியடைந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கியும்,பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அதற்கு ஒரு படி மேலே போன நடிகையும், ஆந்திர அமைச்சருமான ரோஜா இனிப்பு வழங்கியும், பட்டாசுகளை வெடித்து கொண்டாடியது இணையத்தில் வைரலானது.
இதற்கிடையில் சந்திரபாபு நாயுடு செய்த பல நல்ல காரியங்களை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி பேசினார். அதற்கு அமைச்சர் ரோஜா உள்ளிட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து ரஜினிகாந்ததை கேலி செய்து பல்வேறு அவதூறு கருத்துக்களை பரவச்செய்தனர்.
இந்நிலையில் ஜனசேனா கட்சியின் தலைவரான பவன் கல்யாண் பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாகவும், தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து பணியாற்றி தேர்தலை சந்திப்பதாகவும் அறிவித்தார். சிறையில் சென்று சந்திரபாபு நாயுடுவை சந்தித்த பவன்கல்யாண், அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதற்கிடையில் பவன் கல்யாண் ஒரு பேட்டியில், ‘‘முழுநேர அரசியலில் ஈடுபடும் என்னைப் போன்ற பிடிவாதமான ஒருவன். என்போக்கில் ஏராளமான கருத்துக்களை கூறலாம். இருந்தாலும் திரையுலகில் உள்ளவர்கள் எந்த ஒரு அரசியல் கட்சியையும் பகைத்துக் கொள்ள தயாராக இருக்கமாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கே பல சொந்த பிரச்சினைகள் இருக்கின்றன.
மேலும் சந்திரபாபுநாயுடு செய்த நல்ல பணிகளை ஆதரித்து பேசிய, நடிகர் ரஜினிகாந்தை அதிலும் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற அவரை, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் கேலி செய்திருக்கக்கூடாது என்றும் அது துரதிருஷ்டவசமானது’’ என்றும் வேதனையுடன் தெரிவித்தார்.
