Share via:
தென் தமிழகத்தை மிரட்டிய மிக்ஜாம் புயல் மழையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு
நிவாரணம் வழங்கிய அதிரடி காட்டிய நடிகர் விஜய், திடீரென இன்று மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை
சந்தித்து தேர்தல் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
விரைவில் அரசியல் இயக்கம் தொடங்கப்பட இருப்பதாக சொல்லப்படும்
நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்டத் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா,
புதுவை மாநிலங்களிலிருந்ந்தும் நிர்வாகிகள் வந்திருந்தார்கள்.
அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட நடிகர் விஜய் அவரவர் மாவட்டங்களில்
பூத் கமிட்டி அமைக்கும் விவகாரம் எத்தனை தூரம் இருக்கிறது என்று கேட்டுள்ளார். இந்த
தேர்தலுக்கு முழுமையாக களம் இறங்குவதற்கு வாய்ப்பு இல்லை என்றாலும், அதற்குள் கட்சி
பெயரையாவது அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்பது குறித்தும்
ஆலோசனை நடந்திருக்கிறது. இதையடுத்து இறுதியாகப் பேசிய விஜய், ‘கூட்டணி குறித்து இப்போது
எந்த முடிவும் எடுக்கவில்லை. நமது இயக்கத்து வேலைகளை தீவிரமாக மேற்கொள்ளுங்கள். கட்சி
பெயர் அறிவிப்பு மற்றும் கூட்டணி போன்ற எல்லா விஷயங்களையும் நானே அறிவிக்கிறேன் என்று
கூறி அனுப்பி வைத்திருக்கிறார்.
வட மாவட்ட நிர்வாகி ஒருவர் விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்தை சந்தித்து,
‘தற்போது ஆளும் கட்சியில் இருக்கும் முக்கிய நிர்வாகி கட்சி தாவி வருவதற்கு தயாராக
இருக்கிறார். எப்போது சந்திப்பு வைத்துக்கொள்ளலாம்?’ என்று கேட்டிருக்கிறார். அவசரப்பட
வேண்டாம் என்று சொல்லி அனுப்பியிருக்கிறாராம் விஜய்.
யார் அந்த வி.ஐ.பி. என்று தெரிகிறதா..?