Share via:
மிக்ஜாம் புயல் நேரத்தில் எத்தனையோ பெரிய நட்சத்திரங்கள் எல்லாம்
வெளியே தலை காட்டாமல் முடங்கிக் கிடந்த நேரத்தில் தன்னால் முடிந்த உதவிகளை எல்லாம்
செய்து மக்களிடம் நல்ல பெயர் வாங்கியவர் பிரபல சின்னத்திரை நடிகர் பாலா.
அதன்பிறகும் உதவி செய்வதை பாலா நிறுத்தவே இல்லை. சரியான சாலை
வசதியும் வாகன வசதியும் இல்லாமல் கஷ்டப்படும் மலைக் கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக்கொடுத்து
மக்களின் துயர் துடைத்து வருகிறார்.
அதேபோன்று, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள மலைக்கிராமமான
நெக்னா பற்றி சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது. அதாவது, இந்த மலைக்கிராமப் பெண் ஒருவருக்கு
இரவில் பிரசவ வலி ஏற்பட்டதும், தீப்பந்த வெளிச்சத்தில் டோலியில் அவரைப் படுக்க வைத்து
4 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர்.
இந்த செய்தியைப் படித்து வேதனையடைந்த பாலா, உடனடியாக இந்த மலைக்கிராமத்துக்கு
ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
ஆம்புலன்ஸுடன் நெக்னா கிராமத்துக்கு வந்த பாலாவுக்கு ஊர் மக்கள்
ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்து அசத்தினார்கள். எத்தனையோ அரசியல்வாதிகள் எங்களை பார்த்துவிட்டுப்
போயிருக்கிறார்களே தவிர, யாருமே இப்படி ஒரு உதவி செய்ய வேண்டும் என்று யோசித்ததே இல்லை
என்று ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார்கள்.
இந்த கிராமத்துல எந்த பொண்ணுக்கும் அப்படி ஒரு கஷ்டம் வரக்கூடாதுன்னு
ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். என்கிட்டே மட்டும் ரொம்பவும் காசு இருந்திச்சுன்னா,
இந்த மக்களுக்கு உடனே ரோடு போட்டுக் கொடுத்துடுவேன்னும் நடிகர் பாலா சொல்லியிருக்கிறார்.
.அடேங்கப்பா, எத்தனை உயர்ந்த உள்ளம், பாலாவை நாமும் வாழ்த்துவோம்.