Share via:
தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன், சாலையில் மயங்கிக் கிடந்த உணவு டெலிவரி செய்யும் ஊழியரை மீட்டு தனது சொந்த காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தமிழகத்தின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக மா.சுப்பிரமணியன் செயலாற்றி வருகிறார். இவர் சென்னை மதுரவாயல் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள நேற்று (அக்.2) தனது காரில் சி.ஐ.டி. நகர் வழியாக சென்று கொண்டிருந்தார்.
அங்கு சாலையில் திடீரென்று கும்பல் கூடியிருப்பதை பார்த்து அது குறித்து கேட்ட போது, உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர் திடீரென்று வலிப்பு ஏற்பட்டு சாலையில் மயங்கி விழுந்ததை அறிந்தார். உடனடியாக அந்த வாலிபரை மீட்ட அமைச்சர், உடனடியாக தனது சொந்த காரில் கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். உடன் பாதுகாப்பு அதிகாரியையும் அவர் அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் அவ்வழியாக வந்த மற்றொரு காரில் சாதாரணமாக லிப்ட் கேட்டு பொதுக்கூட்ட நிகழ்ச்சி இடத்திற்கு சென்றடைந்தார். தமிழக அமைச்சராக தனது கடமையை செய்த மா.சுப்பிரமணியன், எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் மற்றொரு சாதாரண காரில் லிப்ட் கேட்டு சென்றது பாராட்டுகளை குவித்து வருகிறது.
