Share via:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசியது குறித்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பொதுக்கூட்டத்தை கூட்டி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான குமரகுரு கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும் அமைச்சர் உதயநிதி குறித்தும் அவதூறாக பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் குமரகுரு முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், அவதூறாக பேசிய குமரகுரு, காவல்துறையிடம் முறையாக அனுமதி பெற்று ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி, அந்த பொதுக்கூட்டத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பை பகிரங்கமாக கேட்க வேண்டும் என்றும் அதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
இதை ஏற்றுக் கொண்ட குமரகுரு, கள்ளக்குறிச்சியில் நேற்று காவல்துறையின் அனுமதியுடன் பொதுக்கூட்டத்தை நடத்தினார். அப்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி குறித்தும் அவதூறாக பேசியதற்கு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். இது குறித்த அறிக்கை உயர்நீதிமன்றத்தில் குமரகுரு சார்பில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று அ.தி.மு.க. கட்சியினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
