Share via:
தமிழ்நாட்டில் தலைமைச் செயலாளர், காவல்துறை இயக்குனர், சென்னை
மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், இவர்கள் அனைவரும்
காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம், லஞ்ச ஒழிப்புத்துறை
டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரை கடந்த 8ம் தேதி தேர்தல் ஆணையம் மாற்றியது.
இதனைத் தொடர்ந்து, புதிய தலைமைச் செயலாளராக சாய்குமார், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக
சந்தீப் மிட்டலை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அருணை மாற்றியும், புதிய காவல்
ஆணையராக அபின் தினேஷ் மோதக் ஐபிஎஸ்-ஐ நியமித்தும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அபின் தினேஷ் மோதக் ஐபிஎஸ் இன்று காலை பதவி ஏற்கவும்
உத்தரவிட்டுள்ளது.
ஏனென்றால், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் செயல்பாடுகள் குறித்தும்
டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மாநகரத் துணை
ஆணையர்கள் வழக்குகள் குறித்து நேரடியாகத் தமது ஆலோசனைகளைக் கேட்க வேண்டும் என்று இரண்டு
நாட்களுக்கு முன்பு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டிருந்த நிலையில் மாநகர ஆணையர்
அருண் இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில், எவ்விதப்
புகார்களும் இல்லாத நிலையில் தலைமைச் செயலாளரை மாற்றியும் – பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளரை டிவிஏசி தலைமை இயக்குநராகவும் நியமித்து பிறப்பிக்கப்பட்டுள்ள
உத்தரவுகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு, எம்.பி., கடிதம்
எழுதியிருக்கிறார்.
அதில் அவர், ‘’தமிழ்நாட்டின்
தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வந்த முருகானந்தம்
அவர்களுக்குப் பதிலாக, சாய்
குமார் அவர்களைத் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக ஆணையம் நியமித்துள்ளது. இந்தத்
தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற பணிமாறுதலுக்கு, திராவிட முன்னேற்றக் கழகம் தனது கடும் எதிர்ப்பைத்
தெரிவித்துக் கொள்கிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் இதற்கான எவ்விதக்
காரணங்களும் குறிப்பிடப்படவில்லை; மேலும், முருகானந்தம் குறித்து எந்தவொரு முக்கிய அரசியல் கட்சியும்
எவ்விதப் புகாரும் அளிக்கவில்லை. அவர் அப்பதவியிலிருந்து இடமாற்றம்
செய்யப்படுவதற்கு எவ்விதமான தர்க்கரீதியான அல்லது நியாயமான காரணங்களும் இல்லை.
தமிழ்நாட்டில் தேர்தல்
நடைமுறைகள் தொடங்கி நடைபெற்று வந்தாலும், அதனால், அரசாங்கத்தின்
செயல்பாடுகள் முடங்கிவிடக் கூடாது. அடுத்த அரசு அமைந்து புதிய அமைச்சரவை
பதவியேற்கும் வரையில், நிர்வாகத்தில்
ஒரு தொடர்ச்சி இருக்க வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, அரசியல்கட்சித் தலைமைத் தேர்தல் பணிகளில் மும்முரமாக
ஈடுபட்டிருக்கும் இக்காலகட்டத்தில், அரசாங்கத்தின் அன்றாடச் செயல்பாடுகளைக் கண்காணித்து
நெறிப்படுத்துபவர் தலைமைச் செயலாளரே ஆவார்.
தேர்தல் முடிவுகள்
அறிவிக்கப்படுவதற்கு முந்தைய இந்த மாதத்தில், நிர்வாகம் சார்ந்த பல்வேறு வழக்கமான கோப்புகள், நீதிமன்ற வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட பல
முக்கியப் பணிகள் கையாளப்பட வேண்டியுள்ளன. திரு. முருகானந்தம் கடந்த ஒன்றரை
ஆண்டுகளாகத் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வருவதால், தேர்தல் காலத்தில் அரசாங்கத்தின் செயல்பாடுகள் எவ்விதத்
தடையுமின்றிச் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு மிகவும் பொருத்தமானவர். எனவே உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்’’ என்று
கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேபோல் டாக்டர் சந்தீப்
மிட்டல் அவர்களை தலைமை இயக்குநராக (DGP) நியமித்திருப்பதற்கு எங்களின் கடும் ஆட்சேபணையைத்
தெரிவித்துக் கொள்கிறோம். முதலாவதாக, DVAC-இன் தலைமை இயக்குநர் பதவிக்கும், தேர்தல் நடத்தும் பணிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை
என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
இந்திய அரசியலமைப்பின்
324-வது பிரிவின் கீழ் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் என்பது, வாக்காளர் பட்டியலைத் தயாரித்தல் மற்றும் தேர்தல்களை
நடத்துதல் ஆகிய பணிகளை மேற்பார்வையிடுதல், வழிநடத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு
மட்டுமே உரியதாகும். தமிழ்நாடு தேர்தலை நோக்கிச் செல்கிறது என்பதற்காக மட்டும், அரசின் அனைத்து அதிகாரங்களையும் செயல்படுத்தும் வகையில், தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட ஒரு வரம்பற்ற அதிகாரமாக (Carte
Blanche) இது அமையாது.
அரசியலமைப்பும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டங்கள் 1950 மற்றும் 1951-உம், தேர்தல் தொடர்பான பணிகளைச் செய்வதற்கான அதிகாரத்தை மட்டுமே
தேர்தல் ஆணையத்திற்கு வழங்கியுள்ளன. மாண்பமை உச்சநீதிமன்றம் தனது பல்வேறு
தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளதைப் போலவே, அரசியலமைப்பின் 324-வது பிரிவின்கீழ் உள்ள அதிகாரம் என்பது
தேர்தல்களை நடத்துவது தொடர்பான பணிகளுக்கு மட்டுமே பொருந்தும். தேர்தல் காலத்தில், தேர்தல் ஆணையமானது அரசுக்கு மாற்றாகச் செயல்படுவதில்லை.
எனவே, தேர்தல்களை நடத்துவது தொடர்பான பணிகளுடன் தொடர்பில்லாத
அரசுப் பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிக்கவோ அல்லது இடமாற்றம் செய்யவோ தேர்தல்
ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. மேலும் டாக்டர்
சந்தீப் மிட்டல் அவர்கள் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்த ஒரு
உண்மையாகும். இது வெறும் யூகத்தின் அடிப்படையில் எழுப்பப்படும் ஐயம் அல்ல; மாறாக, டாக்டர்
சந்தீப் மிட்டல் அவர்கள் தனது சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டுள்ள கருத்துக்களின்
அடிப்படையில், அவரே ஒப்புக்கொண்ட ஒரு
உண்மை.
அவர் பதிவிட்டுள்ள
பின்வரும் எக்ஸ் தளப் பதிவைத் தயவுசெய்து காணவும்: மேலும், இஸ்லாம் மற்றும் “இடதுசாரி சித்தாந்தம்” குறித்து
சமூக ஊடகங்களில் அவர் பதிவிட்டுள்ள கருத்துகள், அந்த அதிகாரி ஒருதலைப்பட்சமாகச் செயல்படுபவரே தவிர
நடுநிலையாளர் அல்ல என்பதில், நேர்மையாகச்
சிந்திக்கும் குடிமக்களுக்கு எவ்வித ஐயமும் இல்லை.
தனது சித்தாந்தச்
சார்புகளைத் தவிர, டாக்டர்
மிட்டல் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. டாக்டர்
மிட்டல் மீது உத்தரப்பிரதேச அரசு முதல் தகவல் அறிக்கையையும் பதிவு செய்தது. டாக்டர்
மிட்டல் பொதுவெளியில் வெளியிட்டுள்ள கருத்துக்கள், அவர் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் தீவிர ஆதரவாளர் என்பதையும், முஸ்லிம்களுக்கும் இடதுசாரிச் சித்தாந்தத்திற்கும் எதிராக
வெறுப்புப் பேச்சுகளைப் பேசிய நீண்டகாலப் பின்னணியைக் கொண்டவர் என்பதையும் எங்கள்
மனதில் எவ்வித ஐயமுமின்றி உறுதிப்படுத்துகின்றன.
அவர் மீது கடுமையான ஊழல்
மற்றும் முறைகேடான நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகளும் நிலுவையில் உள்ளன. இத்தகைய
பின்னணியைக் கொண்ட ஒரு அதிகாரியை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தலைவராக
நியமிப்பது, பொதுமக்களின் நலனுக்கு
உகந்ததாக இருக்காது…’’ என்று நேரடி குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.
தேர்தல் கமிஷன் பதில் சொல்லுமா..?