Share via:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா
தொகுத்திருக்கும், ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் விஜய்
பங்கேற்பது உறுதியாகியிருக்கும் நிலையில், திருமா ஆப்செண்ட் ஆகியிருக்கிறார். இந்த
கூட்டத்திலேயே விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜுனா சேர இருப்பதாக அறிவிப்பு வெளியிடுவார்
என்று சொல்லப்படுகிறது.
இந்த புத்தக விழா குறித்து சர்ச்சை எழுந்த நேரத்தில் முதலில் பொதுவிழாவில்
கலந்துகொள்வதில் தவறு இல்லை என்றும் ஓர் ஆண்டுக்கு முன்னரே முடிவு செய்யப்பட்ட நிகழ்வு
என்றும் திருமாவளவன் கூறினார். ஆனால், தி.மு.க. பக்கம் இருந்து கடுமையான எதிர்ப்பு
தோன்றவே இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டாலும்
அதிகாரபூர்வமாக அறிவிப்பு வரவில்லை.
இந்த நிலையில் இன்று அந்த புத்தகத்திற்கான அழைப்பிதழ் வெளியாகியுள்ளது.
அதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார்
என்று கூறப்பட்டுள்ளது. முன்னாள் நீதிபதி சந்துரு மற்றும் அம்பேத்கரின் பேரன் ஆனந்த்
டெல்டும்டே சிறப்புரை ஆற்றுகிறார்கள். லாட்டரி செயற்பாட்டாளர் ஆதவ் அர்ஜுனா ‘சர்ச்சை
உருவாக்க உரை’ ஆற்ற உள்ளார்.
இந்த கூட்டம் எங்கு நடக்கிறது என்ற தகவல் இன்னமும் வெளியிடப்படவில்லை.
இதனை விகடன் அலுவலகத்தில் வைத்து வெளியிட்டு, ஆன்லைன் மூலம் லைவ் டெலிகாஸ்ட் மூலம்
அனைவரும் கேட்பதற்கு வழி வகுக்கும் வகையில் செய்யப்படுவதாகத் தெரிந்துள்ளது. இந்த விழாவை
தவிர்த்திருப்பதன் மூலம் தி.மு.க. கூட்டணியில் திருமா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், திருமாவளவன் கலந்துகொள்ள முடியாது என்று தெரிவித்த காரணத்தால்
அதிருப்தியில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா, விழா மேடையில் விஜய் கட்சியில் இணையும் அறிவிப்பு
வெளியிடுவதாக சொல்லப்படுகிறது. விஜய்க்கு அடுத்த இடத்தில் ஆதவ் அர்ஜுனா அமர்த்தப்படுவார்
என்றும் தெரியவந்துள்ளது. இவர்களுடைய கூட்டணியை முன்கூட்டியே கணித்தே திருமாவளவன் விழாவில்
கலந்துகொள்ள முடியாது என்கிறார்கள். தன்னை ஒரு பெரிய ஹீரோவாக காட்டிக்கொள்வதற்கு முயற்சியெடுக்கும்
ஆதவ் அர்ஜூனாவுக்கு விஜய் மேடை போட்டுக் கொடுக்கிறார்.