Share via:
மீண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டு
பயணிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆதவ் அர்ஜூனா, திடீரென அந்தக் கட்சியில் இருந்து
வெளியேறியிருக்கிறார். அவர் விஜய் கட்சியில் சேர்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,
அ.தி.மு.க.வுக்கு தேர்தல் ஆலோசகராகப் பணியாற்றப் போவதாக தகவல்கள் வெளியாகின்றன.
நேற்று ஆதவ் அர்ஜூனா திடீரென விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து
வெளியேறுவதாக அறிவிப்பு வெளியிட்டார். அவர், ‘’விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினுடைய
வியூக வகுப்பாளராக பணியாற்றத் தொடங்கி, கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைந்தேன்.
சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் சாதிய கட்டமைப்புகள், அதன் அடித்தளம், தொடர்ந்து
நீளும் அதன் அதிகாரக் கரங்கள், பாதிக்கப்படும் மக்களின் துயர்கள் ஆகியவற்றை நான் ஆற்றிய
களப்பணிகளில் உணர்ந்தேன். அதற்கு எதிரான செயற்திட்டங்களைக் கொள்கை ரீதியாக வகுத்து
என்னைச் செயற்பட வைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.
விடுதலைச் சிறுத்தைகளின் கொள்கைகளிலும் நிலைப்பாடுகளிலும் எனக்கு
எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. குறிப்பாக, கட்சியின் வளர்ச்சி என்ற ஒற்றைக் காரணியைத்
தாண்டி எனக்கு வேறு எந்த செயற்திட்டங்களும் இந்த நிமிடம் வரை இல்லை என்பதை தங்களுக்குத்
தெரியப்படுத்திக் கொள்கிறேன். எனக்குள் எழுந்த சில நியாயமான கோபங்கள் மற்றும் மக்கள்
நலனுக்கு எதிரான விவகாரங்களில் என்னிடமிருந்து வெளிப்படும் கருத்துகள் விவாதப்பொருளாக
மாறுகிறது. அது ஒருகட்டத்தில் எனக்கும், உங்களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தும் போக்காக
மாறுவதை நான் விரும்பவில்லை. ஏற்கனவே, கட்சியிலிருந்து என்னை ஆறு மாதம் இடை நீக்கம்
செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதுபோன்ற வீணான விவாதங்களுக்கு வழிவகுக்க கூடாது என்று
எண்ணுகிறேன்.
எனவே, என்னைப் பற்றிய தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல்
இருக்க வேண்டும் என்ற நோக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக என்னை
விடுவித்துக்கொள்வது என்று முடிவெடுத்துள்ளேன். அரசியல் களத்தில் என்னைப் பயணப்பட வைத்து,
நேரடியாகக் களமாடச் செய்த தங்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்களுக்கும்
எனது நன்றி’’ என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் அவரது திடீர் அறிவிப்புக்குக் காரணம் அ.தி.மு.க.வுடன்
நடந்த பேச்சுவார்த்தை என்றே சொல்லப்படுகிறது. விஜய் கட்சியில் சேர்வதற்கு விரும்பிய
அவரை மற்ற நிர்வாகிகள் விரும்பவில்லையாம். அதனால், விஜய் உடனடியாக தலையாட்டவில்லை.
இந்த நிலையில் கட்சியில் இணையாமல் தேர்தல் ஆலோசகராக அ.தி.மு.க.விற்கு பணியாற்றுவதற்கு
விருப்பம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததாக சொல்லப்படுகிறது.
ஒரு கட்சியில் இருந்துகொண்டு இதனை பேசுவது சரியாக இருக்காது என்று
சொல்லப்பட்டதை அடுத்தே, அவர் கட்சியில் இருந்து விலகியிருப்பதாக சொல்லப்படுகிறது. இனி,
எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து தி.மு.க.வுக்கு எதிராக கடுமையாகப் போராடுவார் என்று
சொல்லப்படுகிறது.