சென்னை தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் இன்று காலைமுதல் அமலாக்கத் துறையினர் சோதனையை தொடங்கியுள்ளனர். வீடு மற்றும் அவருக்கு சொந்தமான அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதுமட்டும் இல்லாமல் கோவையில் உள்ள ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதோடு ஆதவ் அர்ஜுனாவின் மாமனாரும் லாட்டரி அதிபருமான மார்ட்டின் வீடு அலுவலகத்திலும் ரெய்டு நடக்கிறது.

ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவது இது நான்காவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.. ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு இரண்டு முறை வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்த பிறகு மார்ச் மாதம் ஒரு முறை ரெய்டு நடைபெற்றது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் கூட்டணிக்கு வழி வகுக்கும் நபராக இப்போது ஆதவ் அர்ஜுனா கருதப்படுகிறார். அதோடு தேர்தல் வியூக நிறுவனமான வாய்ஸ் ஆப் காமன் தலைவராக இருக்கிறார்.  தி.மு.க.வுக்கு எதிராக திருமாவளவன் பேசியதற்கு இவரே முக்கியமான காரணமாக இருந்தார். டாஸ்மாக் விவகாரம் மற்றும் ஆட்சியில் பங்கு ஆகியவற்றை ஆதவ் அர்ஜுனாவே முதலில் பேசினார். இதையடுத்தே திருமாவளவன் இது குறித்துப் பேசினார்.

தி.மு.க. கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேறிவிடுவார் எனும் அளவுக்கு இரண்டு பக்கமும் கடுமையான சூழல் நிலவியது. ஆனால், திடீரென திருமாவளவன் 2026 தேர்தலில் கண்டிப்பாக தி.மு.கவுடனே பயணிப்போம் என்று உறுதி கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் தான் ஆதவ் அர்ஜுனா ரெய்டில் சிக்கியிருக்கிறார்.

கூட்டணி உடைவதற்கு வாய்ப்பு இல்லை என்பது உறுதியானதன் அடிப்படையிலே இந்த ரெய்டு நெருக்கடி கொடுக்கப்படுவதாக பேசப்படுகிறது. மேலும், இங்கு கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் திருமாவளவன் வீடு மற்றும் அலுவலகங்களிலும் ரெய்டு நடப்பதற்கு வாய்ப்பு உண்டு என்று சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் விடுதலைச் சிறுத்தைகள் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link