Share via:
தான் வாங்கிய ஆஸ்கர் விருதை டோர் ஸ்டாப்பராக பயன்படுத்திய ஹாலிவுட் நடிகையின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்கர் விருதை வாங்கிவிட வேண்டும் என்று தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் கலைஞர்கள் ஏராளம்பேர். அப்படி தனக்கு கிடைத்த ஆஸ்கர் விருதை ஹாலிவுட் நடிகையான க்வினெத் பேல்ட்ரோ கதவை நிறுத்த பயன்படுத்தியுள்ள வீடியோ சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கடந்த 1999ம் ஆண்டு ‘ஷேக்ஸ்பியர் இன் லவ்’ என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில் நடிகை க்வினெத் பேல்ட்ரோன் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், அவருடைய வீட்டை சுற்றிக் காண்பித்தபடி நிருபருக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டில் நுழையும் போதே கதவை நிறுத்துவதற்காக ஸ்டோர் ஸ்டாப்பாக ஆஸ்கர் விருதை அவர் பயன்படுத்தியது கேமராவில் பதிவானது. மேலும் அந்த வீடியோவை பார்த்த அனைவரும் ஆச்சரியத்தில் வாய் பிளந்துள்ளனர்.
வீடியோ வைரலான நிலையில் நடிகை க்வினெத் பேல்ட்ரோ, தான் விளையாட்டாக கூறினேன் என்று தெரிவித்தாலும், ரசிகர்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இது விளையாட்டு கிடையாது. அவர் எந்த கலை வடிவத்திலும் பங்கேற்கவில்லை என்றால் சரி. அதற்காக விருதை இப்படிப் பயன்படுத்துவது சரி கிடையாது என்று காட்டமாக பதிவிட்டு வருகின்றனர்.
அதேபோல் இதற்கு முன்னர் நடிகர் நசீருதீன் ஷா தன்னுடைய பிலிம்பேர் விருதுகளை தன்னுடைய பண்ணைவீட்டின் கழிவறை கதவு கைப்படியாக பயன்படுத்தியதை அவரே ஒப்புக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கலைஞர்கள் இப்படி கலைக்காக கிடைக்கும் கவுரவத்தையும் அங்கீகாரத்தையும் நாசமாக்கலாமா? என்பதே அனைவரது கேள்வியாக உள்ளது.

