Share via:
![](https://tamilnewsnow.com/wp-content/uploads/2025/01/WhatsApp-Image-2025-01-01-at-11.42.47_30043741-1024x765.webp)
திராவிட மாடல் ஆட்சி இந்தியாவுக்கே வழி காட்டுகிறது, 200 தொகுதிகளுக்கும் மேலாக அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருந்த மு.க.ஸ்டாலின் ஆட்சி இப்போது அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தில் தலைகுனிந்து நிற்கிறது.
யார் தப்பு செய்தாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்று எச்சரிக்கை செய்த ஸ்டாலின் குற்றவாளியின் கை, காலை மட்டும் உடைத்துவிட்டால் போதும் என்று நினைக்கிறார். மாணவியின் எஃப்.ஐ.ஆரை வெளியிட்டவரில் இருந்து யார் அந்த சார் என்பது வரையிலும் மர்மங்கள் இன்னமும் வெளியாகவே இல்லை. இதற்காக போராட்டம் நடத்துபவர்களை அடக்கி ஒடுக்கிவிட்டால் மக்கள் இந்த விவகாரத்தை மறந்துவிடுவார்கள் என்று நினைக்கிறார்.
யார் அந்த சார் என்று கேள்வி கேட்டு போர்டு தூக்கிய அ.தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடத்த வந்த சீமான் கைது செய்யப்பட்டுள்ளார். நோட்டீஸ் கொடுத்த விஜய் கட்சியின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இப்படி அடக்கி ஒடுக்குவதால் மக்களின் குரலை அடக்கிவிட முடியாது என்பது புரியாமல் திருவள்ளுவருக்கு விழா எடுத்து மக்களை திசை திருப்புகிறார் ஸ்டாலின்.
அண்ணா பல்கலை மாணவி விவகாரம் என்பது ஸ்டாலின் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் கரும்புள்ளி. அமைச்சர்கள் தொடர்பு பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகியும் அவர் தி.மு.க.வினர் இல்லை என்று கூறுவது தவிர வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. வேதாளம் போன்று இப்போது இந்த விவகாரம் ஸ்டாலினை விரட்டத் தொடங்கியுள்ளது.
எங்கே ஓடினாலும் ஒளிய முடியாது ஸ்டாலின். அந்த சார் யார் என்று நடவடிக்கை எடுங்கள். குற்றவாளிகளுக்கு உதவிய அத்தனை பேரையும் தண்டிப்பதுடன் இனியொரு மாணவிக்கு இப்படியொரு கொடூரம் நடந்துவிடக் கூடாது.