Share via:
காட்டுப்பன்றிக்கு வைத்த மின்சார கம்பியில் சிக்கிய புலி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து 12 பேரை வனத்துறையினர் கைது செய்த சம்பவம் மத்தியபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
இந்திய தேசிய விலங்கான புலியின் எண்ணிக்கை குறைந்து வருவதாக இயற்கை ஆர்வலர்கள் கவலையுடன் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் புலிகள் தோலுக்காக வேட்டையாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கணக்கெடுப்பின் படி மத்திய பிரதேசத்தில் 785 ஆகவும், கர்நாடகாவில் 563 ஆகவும், உத்தரகண்டில் 560 ஆகவும் உள்ளன.
மத்தியபிரதேச மாநிலம் ஷாடோல் மாவட்டத்தில் பாந்தவ்கர் தேசிய பூங்காவை ஒட்டியுள்ள ஜெய்த்பூர் வனப்பகுதியில் ஒரு பண்ணை அமைந்துள்ளது. அங்குள்ள காட்டுப்பன்றிகளை பிடிப்பதற்காக கிராமவாசிகள் மின்சார கம்பிகளை ஆங்காங்கே பொருத்தியுள்ளனர்.
இந்நிலையில் மின்சார கம்பி இருந்த பகுதியில் 12 வயதான புலி ஒன்று கடந்து செல்ல முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. புலி உயிரிழந்து 15 நாட்களான நிலையில் அப்பகுதியில் ரோந்து சென்ற வனத்துறையினர் அழுகிக்கிடந்த புலியின சடலத்தை மீட்டு வழக்குப்பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 11 கிராமவாசிகள் கைது செய்யப்பட்டனர். காட்டுப்பன்றிக்காக வைத்த பொறியில் புலி சிக்கி பலியான சம்பவம் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.