Share via:
மிக்ஜாம் புயல் மழை சேதங்கள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசால் அனுப்பப்பட்ட குழுவினர் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 3,4 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. பொதுமக்களின் வீடுகளுக்கள் வெள்ளநீர் புகுந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியது.
புதில் பாதிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள மத்திய குழுவினர் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர். இக்கூட்டத்தின் தலைவரான குணால் சத்யார்த்தி தலைமையிலான குழு 2 பிரிவுகளாக பிரிந்து சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மத்திய குழுவினர் இன்று சந்தித்து பேசினர். குழுவினருடன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, பொதுத்துறை செயலாளர் முருகானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பின் போது 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய குழுவினரிடம் எடுத்துக் கூறினார். சேத மதிப்பு அதிகமாக இருப்பதால் முன்பு கேட்கப்பட்ட ரூ.5,060 கோடி நிவாரணத் தொகையை உயர்த்தி கூடுதலாக வழங்கிட முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
அதன் பின்னர் புயல் பாதிப்பு தொடர்பாகவும், நிதி ஒதுக்கீட்டிற்கான கோரிக்கை மனுவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய குழுவின் தலைவரான குணால் சத்யாத்ரியிடம் வழங்கினார். இதைத்தொடர்ந்து தமிழகத்திற்கு தேவையான உதவிகளை பெற்றுத் தருவதாக மத்தியக் குழுவினர் உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.