Share via:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் பழைய வத்தலக்குண்டு
ஊராட்சியில் அமைந்துள்ளது ஸ்ரீமகா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில். இந்த கோயிலில் தேவேந்திர
குல வேளாளர் சமுதாயத்திற்கு தனி மண்டகப்படி அமைத்துத் தரும்படி நீண்ட நாள் கோரிக்கை
இருக்கிறது.
இந்து அறநிலையத் துறை சார்பில் இதற்கு அனுமதி வழங்குவது தொடர்ந்து
மறுக்கப்பட்டு வருகிறது. எனவே தேவேந்திர குல வேளாளர்களுக்கு தனி மண்டகப்படி கட்டித்தர
மறுக்கும் வருவாய்த்துறையை கண்டித்து நேரடியாக ஒட்டுமொத்த மக்களும் இணைந்து திடீரென
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் போக்குவரத்து தடைப்பட்டது.
இந்த போராட்டத்திற்குப் பிறகு தேவேந்திரகுல வேளாளர்கள் ஒன்றிணைந்து
அடுத்தகட்ட போராட்ட முறைகளை அறிவித்துள்ளனர். அதன்படி தனி மண்டகப்படி கோரிக்கை ஏற்கப்படவில்லை
என்றால், இந்து மதத்திலிருந்து வேறு மதம் மாறுவதற்கு திட்டமிட்டிருக்கின்றனர். அதோடு,
நிலக்கோட்டை வட்டாட்சியரிடம் தங்களுடைய ரேசன் கார்டு, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை
உள்ளிட்ட அத்தனை ஆவணங்களையும் திரும்ப ஒப்படைக்கும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மேலும், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரையில் போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை
என்றும் அடுத்தகட்டமாக வரப்போகும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்தும், அமைச்சர்கள்
மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
அரசு என்ன செய்யப்போகிறது..?