Share via:
சென்னை அடையாறில் ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென்று தீப்பற்றி எரிந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் டீசல் பேருந்துக்கு மாற்றாக சிஎன்ஜி எனப்படும் எரிவாயு பயன்படுத்தி அரசு பேருந்துகளை இயக்க சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் குறைவான விலையில் பேருந்துகள் இயக்கப்படுவதுடன் அதிக மைலேஜ் கிடைக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
அதன்படி சென்னை அடையாறு பணிமனையில் இருந்து பிராட்வே முதல் கேளம்பாக்கம் சிறுசேரி வரை பயணிக்கும் தடம் எண் 109பி பேருந்து சோதனை முறையில் இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பேருந்தில் பயணிகள் இருந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென்று பேருந்தில் கரும்புகை கிளம்பியிருக்கிறது.
சுதாரித்துக் கொண்ட பேருந்து ஓட்டுனர் உடனடியாக பயணிகள் அனைவரையும் எச்சரித்து பேருந்தில் இருந்து கீழே இறக்கிவிட்டார். அதைத்தொடர்ந்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். அதற்குள் பேருந்தில் கடும் கரும்புகையுடன் தீ மளமளவென பற்றி எரிந்தது. இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீவிபத்தால் அடையாறு எல்.பி.சாலை அருகே சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. ஓட்டுனரின் சாதுர்யத்தால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சி.என்.ஜி. எனப்படும் எரிவாயு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது தோல்வியில் முடிந்துள்ளது, போக்குவரத்துத்துறை அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்த செய்திகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.