Share via:
சுற்றுலாதலமான கொடைக்கானல் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படுகிறது. பரிட்சை விடுமுறை மட்டுமல்லாமல் வார இறுதி நாட்களிலும் ஆயிரக்கணக்கான சுற்றுலாவாசிகள் கொடைக்கானலுக்கு படையெடுப்பது வழக்கம். மலைப்பாங்கான இடங்களில் நிலச்சரிவு உள்ளிட்ட சில பிரச்சினைகள் வரத்தான் செய்கிறது.
அந்த வகையில் கொடைக்கானல் அருகே உள்ள தொலுக்கம்பட்டி பகுதியில் 200 அடி நீளத்திற்கு நிலத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து சென்ற அதிகாரிகள் மேல்மலை கிளாவரை தொலுக்கம்பட்டி கிராமத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதாவது மேல்மலையில் உள்ள கீழ்கிளாவரை கிராமத்திற்கு குழாய் மூலம் செருப்பன் ஓடையில் இருந்து நீர் வருவது வழக்கம். கடந்த சில நாட்களாக அந்த வழித்தடத்தில் நீர் வராததால் கிராம மக்கள் சிலர் அங்கு சென்று பார்த்த நிலையில் நிலத்தில் விரிசல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.