தமிழக வரலாற்றில் முதன் முறையாக ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்திற்கு முன்பு கையில் பதாகை பிடித்துக் கொண்டு போராட்டம் நடத்தியது கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.

சட்டசபை தொடங்கிய தினத்திலிருந்து, ‘யார் அந்த சார்’ என்ற பேட்ஜ் குத்திக்கொண்டு அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதும், கோஷம் போடுவதாக இருந்தனர். இந்த நிலையில் அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த சுதாகர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று, தி.மு.க.வினர் சட்டமன்ற வாசலில் இவர் தான் அந்த சார் என்ற பதாகையுடன் போராட்டத்தில் இறங்கினார்கள்.

முன்னதாக கவர்னர் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமானம் செய்ததாக தி.மு.க.வினர் தமிழகம் முழுக்கப் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. போராட்டம் நடத்திவரும் எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்கு தி.மு.க.வுன் போராட்டத்தைக் கையில் எடுத்திருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்ட முன்னாள் அதிமுக வட்ட செயலாளர் தான் அந்த சார் என்று போஸ்டருடன் திமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வெளியே முழக்கமிட்டனர். இதுவரை கருப்பு சட்டையுடன் வந்த அ.தி.மு.க.வினர் இன்று வெள்ளை சட்டையுடன் சட்டசபைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இன்று யுஜிசிக்கு எதிராகவும் போராட்டம் நடத்தத் தொடங்கியிருக்கிறார்கள். இது குறித்து ஸ்டாலின், ‘’கல்லூரிகள் இயங்குவது மாநில அரசின் இடத்தில்; பேராசிரியர்களுக்கு ஊதியம் தருவது மாநில அரசு; உதவித்தொகை – ஊக்கத்தொகை – கல்விக் கட்டணச் சலுகை என மாணவர்களுக்கு அனைத்துச் செலவுகளையும் செய்வது நாங்கள்! இவ்வளவையும் நாங்கள் செய்ய, எம் பல்கலைக்கழங்களுக்கு வேந்தராக இருந்து நிர்வகிப்பதோ..?

எங்கிருந்தோ வந்த ஆளுநர்! இதையெல்லாம் மிஞ்சும் கொடுமையாக, துணைவேந்தரையும் ஒன்றிய அரசால் அனுப்பப்பட்ட ஆளுநரே நியமிக்கலாம் என்று யுஜிசி தன் விதிகளைத் திருத்துமானால் என்னவாகும் உயர்கல்வியின் நிலை? தமிழ்நாடு உயர்கல்வியில் முதலிடத்தில் இருப்பதைக் காணப் பொறுக்காத வயிற்றெரிச்சலில் நம்மைக் கீழே தள்ளும் அப்பட்டமான முயற்சிதான்

இந்த விதிமுறைகளை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். தமிழர்களின் ஒன்றுபட்ட குரலுக்கு ஒன்றிய அரசு செவிசாய்க்காவிட்டால், மக்கள் மன்றத்தையும் நீதிமன்றத்தையும் நாடுவோம்’’ என்று இன்று போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

ஆளும் கட்சியே போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியிருப்பது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link