Share via:
திருப்பதி லட்டு விவகாரத்தை முன்னிட்டு அம்மாவட்டம் முழுவதும் காவல் சட்டப்பிரிவு 30 ஒரு மாத காலத்திற்கு அமல்படுத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் தற்போது சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. முந்தைய ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சியில் திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் லட்டில் மிருகக்கொழுப்பு கலந்துள்ளதாக ஆய்வறிக்கை வெளியானது. இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்த முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட நெய் சப்ளை செய்து வந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் விடப்பட்டது. அதே போல் திருப்பதியில் தோஷ நிவர்த்திக்காக பல்வேறு பரிகாரங்கள், யாகங்கள், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மேலும் ஒவ்வொரு தங்கள் வீட்டில் மாலை 6 மணியளவில் விளக்கேற்றி, ஓம் நமோ நாராயணா நாமத்தை சொல்லி வழிபட வேண்டும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் லட்டு பிரசார விவகாரத்தில் செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்யப் போவதாக ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார். அதன்படி நாளை அவர் திருப்பதி செல்ல உள்ளார். இதற்கு பா.ஜ.க., தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
திருப்பதி லட்டு விவகாரத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அதிகளவில் திருப்பதியில் ஆய்வு மேற்கொள்ளவும், தோஷம் கழிக்கவும் தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு கருதி,மாவட்டம் முழுவதும் காவல்சட்டப்பிரிவு 30ஐ அக்டோபர் 24ம் தேதி வரை அமல்படுத்தி உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுப்பாராயுடு தெரிவித்துள்ளார். மேலும் முன் அனுமதி பெறாமல், எந்த கட்சியேணும் பேரணி, பொதுக்கூட்டம் என்று நடத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.