Share via:
கொரட்டூரைச் சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் கழிவறைக்கு சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு விரிவாக்கம் ஞானமூர்த்தி நகர் மகாத்மா காந்தி தெருவைச் சேர்ந்த யோகேஷ் என்ற 41 வயதான பாடி பில்டர் கடந்த 2022ம் ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை வெற்றி பெற்றுள்ளார்.
அதோடு பல ஆண்டுகளாக பல்வேறு சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு யோகேஷ் வைஷ்ணவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. திருமணத்திற்கு பிகு தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடாமல் ஜிம்மில் பயிற்சியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அதன்படி கடந்த சில ஆண்டுகளாக கொரட்டூர் பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வரும் ஒரு ஜிம்மில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் யோகேஷ் நேற்று காலை முதல் மாலை வரை ஜிம்மில் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில் வீட்டிற்கு செல்ல புறப்பட்டார். அப்போது 5.45 மணியளவில் கழிவறைக்கு சென்ற அவருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்
கழிவறைக்கு சென்ற யோகேஷ் நீண்ட நேரமாக திரும்பி வராததால் சந்தேகமடைந்த அங்கிருந்தவர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது யோகேஷ் மயங்கி கீழே விழுந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது யோகேஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்த யோகேஷ் திருமணத்திற்கு பிறகு தீவிர பாடி பில்டிங்கில் ஈடுபடாமல், சம்பவத்தன்று அதிகளவில் எடையை தூக்கியதாகவும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. அதன் காரணமாகவே யோகேசுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட யோகேஷ் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
