Share via:
பூரி ஜெகந்நாதர் கோவிலில் வருகிற ஜனவரி மாதம் 1ம் தேதி பக்தர்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது.
ஒடிசா மாநிலம் பூரியில் உலகப்புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலயம் அமைந்துள்ளது. 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த புராதன கோவிலுக்கு உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவிலுக்குள் பக்தர்கள் கேமரா, செல்போன் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்லவும், கோவிலில் படம் எடுக்கவும் ஏற்கனவே தடை அமலில் உள்ளது.
அந்த வகையில் தற்போது வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆதடை கட்டுப்பாடும் அமல்படுத்தப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘‘கோவிலுக்கு வருபவர்களில் சிலர் ‘அநாகரீகமான’ உடை அணிந்து வருகிறார்கள். இதனால் நிதித்துணைக்குழுக் கூட்டத்தில் ஆடைக்கட்டுப்பாடு விதிக்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.
அதேபோல் கோவில் நிர்வாகத்தலைவர் ரஞ்சன்குமார் தாஸ் கூறுகையில், ‘‘கோவிலுக்கான கண்ணியத்தையும், புனிதத்தையும் காக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. துரதிருஷ்டவசமாக ஒரு சிலர் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட், ஸ்லீவ்லெஸ், அரைக்கால் சட்டை உள்ளிட்ட உடைகளை அணிந்து வருகிறார்கள். இவர்களை பார்க்கும் போது கடற்கரை, பூங்காவிற்கு செல்பவர்கள் போல் உள்ளது. கோவில் என்பது பொழுதுபோக்கு இடம் கிடையாது. இதனால் கோவில் நிர்வாகம் பக்தர்கள் மத்தியில் ஆடைக்கட்டுப்பாட்டை கடைபிடிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது’’ என்று தெரிவித்துக் கொண்டார்.
கோவிலின் புனிதத்தன்மையை காப்பாற்ற கோவில் நிர்வாகம் இப்படிப்பட்ட முடிவை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கதுதான் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.