Share via:
அ.தி.மு.க. கூட்டணியில் அசாதுத்தீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லீம் கட்சி இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது இருக்கட்சி தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இனி பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்று சமீபத்தில் அறிவித்தது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து தமிழக பா.ஜ.க. தொடர் சறுக்கல்களை சந்தித்து வருகிறது. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கும் பா.ஜ.க. தலைமை பெரும் நெருக்கடி கொடுத்து வருவதாகவும், இதனால் அண்ணாமலை அடிக்கடி கூட்டங்களை நடத்துவது டெல்லி தலைமையை நேரில் சந்திப்பது என அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
பா.ஜ.க. நிலைமை இப்படியிருக்க மறுபக்கம் அ.தி.மு.க. தலைமையில் புதிய கூட்டணி உருவாக்குவது குறித்து அக்கட்சி தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக அசாதுத்தீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமின் கட்சி நிர்வாகிகள் இணைந்துள்ளனர்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அக்கட்சி நிர்வாகிகள் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து செயல்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
தொகுதி பங்கீடு குறித்து தேர்தல் நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 10ம் தேதி (அக்டோபர்) நடந்த 2ம் நாள் சட்டமன்ற கூட்டத்தொடரில் இஸ்லாமிய சிறை வாசிகளை விடுவிப்பது தொடர்பாக அ.தி.மு.க. விவாதம் நடத்தியதும், வெளிநடப்பு செய்ததும் குறிப்பிடத்தக்கது.