Share via:
சென்னையை அடுத்த வீச்சூரில் அ.தி.மு.க. பிரமுகர் மர்ம கும்பால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் வீச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் வைதேகி. இவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவியாகவும், வீச்சூர் ஊராட்சி மேலவை பிரதிநிதியாகவும் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சுமன் (வயது 38) அ.தி.மு.க.வில் சோழவரம் மேற்கு ஒன்றிய அண்ணா தொழிற்சங்க பேரவையில் செயலாளராக பதவி வகித்து வந்துள்ளார். மேலும் சுமன் ரியல் எஸ்டேட், செங்கல், சிமெண்ட் விற்பனையும் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் இருந்த சுமனை அப்பகுதி இளைஞர்கள் சிலர் கோவில் திருவிழாவுக்காக பத்திரிகை எழுதுவதற்காக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அனைவரும் வீச்சூர் மேட்டுத் தெருவில் உள்ள மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டி அருகே பேசிக் கொண்டிருந்த போது அப்போது 6 பேர் மூன்று இருசக்கர வாகனங்களில் அங்கே வந்துள்ளனர்.
கண் இமைக்கும் நேரத்தில் சுமனை சுற்றி வளைத்து அந்த 6 பேரும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ஓட ஓட விரட்டி தாக்கிவிட்டு சென்றனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சுமனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த மணலிபுதுநகர் போலீசார் விரைந்து சென்று உயிரிழந்த சுமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவம் நடைபெற்ற இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் போலீஸ் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட அ.தி.மு.க. நிர்வாகி சுமனுக்கும், அதே பகுதியை சேர்ந்த சரண் என்பவருக்கும் பெருமாள் கோவில் புரட்டாசி சனிக்கிழமை விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர் இருவரையும் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாக தெரிகிறது.
முன்விரோதமாக அல்லது குடும்பப்பிரச்சினையா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊராட்சி மன்ற துணைத் தலைவியின் கணவரும், அ.தி.மு.க. நிர்வாகியுமான சுமன் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
