Share via:
கேரளாவில் ரூ.10 லட்சம் கேட்டு 6 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பகுதியில் அபிஹல் சாரா ரிஜி என்ற 6 வயது சிறுமி நேற்று மாலை 5 மணியளவில் தனது சகோதரன் ஜானதன் உடன் சேர்ந்து டியூசனுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது சிறுமி சாராவை மர்ம கும்பல் ஒன்று பின் தொடர்ந்து வந்து காரில் கடத்திச் சென்றது. இதைத்தொடர்ந்து மர்ம கும்பல், சாராவின் தாயாருக்கு போன் செய்து, தங்கள் மகளை கடத்தியுள்ளதாகவும், அவரை விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும், போலீசுக்கு இது குறித்து தெரிவிக்கக் கூடாது என்றும் மிரட்டியுள்ளது.
மர்ம கும்பலின் மிரட்டலால் அதிர்ந்து போன சிறுமியின் பெற்றோருக்கு மீண்டும் அந்த மர்ம கும்பல் போன் செய்து ரூ.10 லட்சம் கொடுத்தால்தான் சிறுமியை விடுவோம் என்று மிரட்டியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கடத்தப்பட்ட சிறுமி சாராவை கேரள மாநிலம் முழுவதும் தீவிரமாக தேடி வருகின்றனர். அதே போல் சிறுமி கடத்தப்பட்ட இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த நிலையில், சிறுமி மருதனப்பள்ளி வெள்ளை நிற காரில் கடத்தப்பட்டதையும் கண்டுபிடித்தனர்.
சிறுமி கடத்தல் விவகாரத்தில் ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிந்துள்ள நிலையில், சிறுமியை மீட்க போலீசார் கேரளா முழுவதும் தீவிர ரோந்து பணியையும் முன்னெடுத்துள்ளனர். ரூ.10 லட்சம் கேட்டு 6 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் கேரள மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.