Share via:
தங்கலான் திரைப்படத்திற்கு நிச்சயமாக தேசிய விருது கிடைக்கும் என்பது நடிகர் விக்ரமின் கெட்டப்பை பார்த்தாலே தெரிகிறது என்கிறார்கள் படக்குழுவினர்.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடிகர் விக்ரம் நடித்திருக்கிறார் என்று சொல்வதைவிட வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் இத்திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
கோலார் தங்க வயலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படம் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இத்திரைப்படத்தின் டீசர் சென்னையில் வெளியான நிலையில், இயக்குனர் ரஞ்சித் மனம்திறந்து பல்வேறு தகவல்களை வெளியிட்டார். அவர் பேசும்போது, ‘‘ஒரு படத்திற்காக அனைவரும் கடினப்பட்டு உழைப்பது உண்மைதான். ஆனால் ஒரு கலைஞனாக நாம் காட்டும் ஈடுபாடும் முக்கியம். அந்த கடின உழைப்பையும், ஈடுபாட்டையும் விக்ரம் சாரிடம் படப்பிடிப்பு தளத்தில் பார்த்தேன்’’ என்று ரஞ்சித் கூறினார்.
மேலும் விலா எலும்பு உடைந்த பின்பும் கூட சண்டைக் காட்சிகளில் நடிகர் விக்ரம் நடித்து முடித்தது ஆச்சரியமாகவும், பயமாகவும் இருந்தது என்று தெரிவித்தார்.
தங்கலான் டீசர் வெளியானதை தொடர்ந்து அதை பார்த்த ரசிகர்கள், தேசிய விருதை வாங்க படக்குழுவினர் தயாராக இருக்க வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

