Share via:
காஸாவில் கொல்லப்பட்ட மீட்பு மற்றும் பாதுகாப்பு உறுப்பினர்கள் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையேயான தாக்குதல் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 அதிகாரிகள் உயிரிழந்த நிலையில், பணியில் இருந்த மனிதாபிமான ஊழியர்களும் கொல்லப்பட்டனர். எனவே பலி எண்ணிக்கை தற்போது 31 ஆக உயர்ந்துள்ளது.
காஸாவில் இன்னும் 24 மணி நேரத்திற்கு மட்டுமே தண்ணீர், உணவு, மின்சாரம் இருப்பு இருப்பதாக ஏற்கனவே அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 10 லட்சம் மக்கள் தாக்குதலில் இருந்து தப்பிக்க காஸாவை விட்டு வெளியேறிவிட்டதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
காஸாவில் பாதிக்கப்பட்டுள்ளவர்களை மீட்பதற்காகவும், அவர்களை பாதுகாப்பான இடங்களில் வழியனுப்பி வைக்கும் ஊழியர்கள், இஸ்ரேல் ராணுவத்தின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டு வரும் சம்பவம் சர்வதேச நாடுகள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் காஸாவின் பல்வேறு பகுதிகள் தரைமட்டமாக்கப்பட்டு வருகின்றன. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பொதுமக்கள் கும்பல், கும்பலமாக உயிரிழக்கும் சம்பவத்தை நினைத்தாலே மனம் பதறுகிறது.

