Share via:
ஹமாஸ் அமைப்பை இந்த பூமிப்பந்தில் இருந்தே முற்றிலுமாக துடைத்தெறிவோம் என்று இஸ்ரேல் செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல்& ஹமாஸ் இடையிலான போர் ஒரு வாரத்தையும் தாண்டி உச்சகட்டத்தை அடைந்து வருகிறது. இத்தாக்குதலில் 1,400 இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் ஹமாஸ் அமைப்பினர் 199 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துள்ளதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.
ஒரு பக்கம் இஸ்ரேல் நடத்தும் வான்வழி உள்ளிட்ட தாக்குதல்கள் மூலம் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என மொத்தம் 2,750க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தினர் காசாவை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மக்கள் மருத்துவம், உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். காசாவில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ஏற்கனவே இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்துள்ள நிலையில் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த செய்திக் குறிப்பில், ‘‘ஹமாசை இந்த பூமியில் இருந்து முற்றிலுமாக துடைத்தெறிவோம். போரை ஆரம்பித்தது ஹமாஸ் என்பதால், போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பே கிடையாது என்று தெரிவித்துள்ளது. மேலும் ஹமாசின் தலைவர் யாஹ்யா சின்வார் உள்ளிட்ட அவரின் குழுவினர் எங்கள் பார்வையில் இருக்கின்றனர். விரைவில் அவர்களை நெருங்குவோம்’’ என்று வெளியிட்டுள்ளது சர்வதேச நாடுகள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
காசாவில் குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் கொல்லப்பட்டு வருவதாக ஏற்கனவே ஐ.நா. அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், வரும் காலங்களில் ஐ.நா. போர் நிறுத்தம் குறித்து இருதரப்புக்கும் அறிவுறுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

