Share via:
வடகாசாவில் இருந்து 10 லட்சம் மக்கள் 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் அக்டோபர் மாதம் 7ம் தேதி தொடங்கி இன்று 7வதுநாளாக நடைபெற்று வருகிறது. மேலும் பல பிணைக்கைதிகளை பிடித்து வைத்து ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் ராணுவத்தை மிரட்டி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் காசாவில் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.
இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் வடகாசாவில் உள்ள 10 லட்சம் மக்கள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ள பாலஸ்தீனியர்களை உடனே வெளியேறவும் இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் போர் தாக்குதலால் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் பெரும் பொருட்சேதமும், உயிர்சேதமும் ஏற்பட்டுள்ளது சர்வதேச நாடுகள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
**********

