Share via:
ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை குவித்து வரும் இந்தியா, ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை புரிந்துள்ளது.
சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிக் கடந்த செப்டம்பர் 23ம் தேதி தொடங்கி தற்போது 12வது நாளாக நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடந்து வரும் இப்போட்டியில் இந்தியா தனது முந்தைய சாதனையான 70 பதக்கங்களை முறியடித்து 83 பதக்கங்களுடன் தொடர்ந்து சாதனைகளை புரிந்து வருகிறது.
அந்த வகையில் இன்றைய போட்டியான ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா சார்பாக தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால் சிங், மலேசியாவைச் சேர்ந்த அஸ்மான் ஐஃபா மற்றும் முகமது சயாபிக் ஜோடியை எதிர்க் கொண்டது. இதில் முதல் மற்றும் இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி 11 புள்ளிகள் என்ற வீதத்தில் முன்னிலை வகித்து முதல் இடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
இந்த பதக்கம் இந்தியாவின் 20வது தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. பதக்கப்பட்டியலில் 20 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என 83 பதக்கங்களுடன் தொடர்ந்து 4வது இடத்தில் நீடித்து வருகிறது.

